‘முககவசம் அணிய மாட்டோம்’ நடுவானில் விமானத்தில் கோழிக்கறி வியாபாரிகள் ரகளை: போலீசார் தீவிர விசாரணை

மீனம்பாக்கம்: பெங்களூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த 2 பயணிகள், முககவசம் அணிய மறுத்து, சக பயணிகள், பணிப்பெண்களிடம் நடுவானில் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள், சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பெங்களூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்றிரவு 11 மணிக்கு 28 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்த போது, சென்னையை சேர்ந்த முகமது அர்சத் (22), தாரிக் ரகுமான் (29) ஆகியோர் முககவசங்களை கழற்றி பாக்கெட்களில் வைத்து கொண்டு பயணம் செய்தனர். முககவசங்களை அணியும்படி சக பயணிகள் கூறினர். அவர்கள் மறுத்ததால், பணிப்பெண்களிடம் சகபயணிகள் தெரிவித்தனர். உடனே பணிப்பெண்களும் வற்புறுத்தினர். அதற்கு அவர்கள், ‘நாங்கள் விமானத்திற்குள் தானே இருக்கிறோம், எதற்காக முகக்கவசம் அணிய வேண்டும், காரில் செல்பவர்கள் கூட முகக்கவசங்கள் அணிவதில்லை’ என்று வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, தலைமை விமானியிடம் பணிப்பெண்கள் புகார் செய்தனர். உடனே விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கியது. கதவுகள் திறந்ததும், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் ஏறினர். அவர்களை பார்த்ததும், ரகளை செய்த 2 பயணிகளும் அவசர அவசரமாக மாஸ்க்குகளை அணிந்தனர். ஆனாலும் பாதுகாப்பு அதிகாரிகள்,  இருவரையும் விமானத்தை விட்டு கீழே இறக்கி, இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அங்கும் இருவரும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து இருவரும் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் இருவரும் கோழிக்கறி வியாபாரிகள் என்றும், வியாபாரம் சம்பந்தமாக பெங்களூருக்கு சென்று விட்டு திரும்பியதாகவும் தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post ‘முககவசம் அணிய மாட்டோம்’ நடுவானில் விமானத்தில் கோழிக்கறி வியாபாரிகள் ரகளை: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: