மாமல்லபுரத்திற்கு கல்வி சுற்றுலா பள்ளி மாணவர்களின் வருகை அதிகரிப்பு: கடந்த மாதம் 20 ஆயிரம் பேர் வந்தனர்

 

மாமல்லபுரம், பிப்.19: மாமல்லபுரத்திற்கு கல்விச் சுற்றுலா வரும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் வந்துள்ளனர். மாமல்லபுரத்தை கடந்த 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் வெண்ணெய் உருண்டை பாறை, அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம் உள்ள கடற்கரை கோயில் உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்களை அழகுற செதுக்கினர். இந்த புராதன, சின்னங்களை சுற்றி பார்க்க உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

மேலும், 1300 ஆண்டுகளை கடந்தும் இந்த புராதன சின்னங்கள் கம்பீரமாக நின்று பயணிகளுக்கு காட்சி கொடுக்கிறது. இதன் வரலாறு மற்றும் அதனை செதுக்கிய மன்னர்கள் குறித்த அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களையும், பிற மாநில பள்ளி மாணவர்களையும் பஸ், ரயில் மூலம் பள்ளி ஆசிரியர்கள் இங்கு அழைத்து வருகின்றனர். இந்நிலையில் இதுவரை சுற்றுலா பயணிகளின் வருகையில் முதலிடம் பிடித்த தாஜ்மஹாலை, கடந்தாண்டு பின்னுக்குத் தள்ளி மாமல்லபுரம் முதலிடம் பிடித்தது.

தற்போது, கல்விச் சுற்றுலா என்றதுமே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நினைவுக்கு வருவது மாமல்லபுரம் தான். கடந்த, 2019ம் ஆண்டு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் அரசு முறை சந்திப்பு, கடந்த 2022ம் ஆண்டு சர்வதேச 44வது சதுரங்கப் போட்டி, காற்றாடி திருவிழா, கடந்தாண்டு 5 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் தயாரித்த 150 பிக்கோ செயற்கைகோள் சவுண்டிங் ராக்கெட் விண்ணில் செலுத்தியது. ஜி20 விருந்தினர்கள் மாநாடு என உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்த மாமல்லபுரம் தற்போது கல்விச் சுற்றுலாவில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறது.

மேலும், ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் வார இறுதி நாட்களில் மாமல்லபுரம் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலா என்ற பெயரில் மாமல்லபுரம் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், நேற்றும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா வந்ததால் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் வளாகம் களைகட்டி காணப்பட்டது. தொடர்ந்து, மாணவ, மாணவிகள் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் வரிசையாக சென்று புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, அங்குள்ள சுற்றுலா வழிகாட்டிகளிடம் அதன் வரலாற்று தகவல்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டனர்.

The post மாமல்லபுரத்திற்கு கல்வி சுற்றுலா பள்ளி மாணவர்களின் வருகை அதிகரிப்பு: கடந்த மாதம் 20 ஆயிரம் பேர் வந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: