கிருஷ்ணகிரி, ஜூலை 30: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கிருஷ்ணகிரி மாணவர்கள் பரிசு மற்றும் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஜனவரி 24ம் தேதி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தொடங்கி வைத்தார். பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளுக்கு மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகள், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் என 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கபடி, சிலம்பம், தடகளம், இறகு பந்து, கையுந்து பந்து, கிரிக்கெட், செஸ், கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கூடைப்பந்து மற்றும் மேசைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் கடந்த பிப்ரவரி 7ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடத்தப்பட்டது.
போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 6750, பெண்கள் பிரிவில் 2,476 நபர்கள் என மொத்தம் 9,226 நபர்கள் கலந்துகொண்டனர். இதில் முதலிடம் பிடித்தவர்களுக்கு ₹31.64 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பதக்கம், சான்றிதழ்களை கலெக்டர் சரயு, செல்லக்குமார் எம்பி, மதியழகன் எம்எல்ஏ., ஆகியோர் வழங்கினர். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 1ம் தேதி முதல் 25ம் தேதி வரை சென்னையில் நடந்தது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மொத்தம் 534 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் கடந்த 25ம் தேதி பரிசு, கோப்பைகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக பள்ளி பிரிவிற்கான தடகளம் விளையாட்டு போட்டியில் கிருஷ்ணகிரி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிலும் மாணவர் முகேஷ் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கமும், ₹1 லட்சம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களையும், கல்லூரி பிரிவிற்கான தடகளம் விளையாட்டு போட்டிகள் ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் பி.இ.நான்காம் ஆண்டு படித்து வரும் ஜென்சிசூசன், வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், ₹75 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் குண்டு எறிதில் வெண்கலப்பதக்கமும், ₹50 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றனர்.
அரசு ஊழியர் பிரிவிற்கான தடகளம் விளையாட்டுப் போட்டியில், கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியை சேர்ந்த சென்னை காவல்துறையில் காவலராக பணிபுரியும் அனுபிரியா என்பவர், 1500 மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம், ₹75 ஆயிரம் பரிசுத்தொகை, சான்றிதழ்களும், மாற்றுத்திறனாளி பிரிவிற்கான (பார்வைத்திறன் குறைபாடு பிரிவு) தடகளடம் விளையாட்டு போட்டியில் பர்கூர் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவி நித்யா, 100 மீ ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும், ரூ.50 ஆயிரம் பரிசுத்தொக மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் என மொத்தம் 1 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 5 பதக்கங்கள், ₹3.50 லட்சம் பரிசுத்தொகை பெற்றுள்ளார். மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கலெக்டர் சரயு பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
The post மாநில விளையாட்டு போட்டிகளில் கிருஷ்ணகிரி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.