மழைக்கால நோய்கள் பரவுவதை தடுக்க நீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

 

சிவகங்கை, டிச. 31: பொதுமக்கள் அனைவரும் மழைக்காலங்களில் பரவும் நோய்கள் வராமல் தடுக்க நீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,’மழைக்காலங்களில் பரவும் நோய்களான வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை, டைபாய்டு போன்ற நோய்களை வராமல் தடுக்க குடிநீரை நன்றாக காய்ச்சி ஆறவைத்த பிறகு குடிக்க வேண்டும். மழைத்தண்ணீரை சேமித்து வைப்போர் நன்றாக காய்ச்சி ஆறவைத்த பிறகே பயன்படுத்த வேண்டும்.

தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் பாத்திரங்களை மூடிவைக்க வேண்டும். தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒருமுறை தேங்காய் நார் அல்லது பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து சுத்தம் செய்து காயவைத்து பின்னர் தண்ணீரை நிரப்ப வேண்டும். தற்பொழுது, மழை பெய்து வருவதால் வீடுகளை சுற்றி உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள் உபயோகப்படுத்தப்படாத டயர்கள், ஆட்டு உரல், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

இதன் மூலம் கொசு உற்பத்தியாவது தடுக்கப்பட்டு டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மழைக்கால நோய்கள் பரவுவதை தடுக்க நீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: