மதுரை சித்திரை திருவிழாவில் விசிறி வீச அடையாள அட்டை வழங்க கோரி மனு

மதுரை, ஏப். 11: மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் கோயில் விழாவிலும், அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிலும், லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திரள்வார்கள். விழா நடைபெறும் சித்திரை மாதம் அதிக வெயில் காலம் என்பதால், வெப்பத்தை தணிக்க பக்தர்களுக்கு 10 அடி உயரமுள்ள தென்னை ஓலை, பனை ஓலை, மயில் தோகையிலான விசிறி வீசி, செயற்கையான காற்றை உருவாக்கி கொடுப்பார்கள். இது பக்தர்களுக்கு சற்று ஆறுதல் தரும். இதற்காக பரம்பரை பரம்பரையாக 20க்கு மேற்பட்டவர்கள் விசிறி வீசி வருகின்றனர். இது பக்தர்களுக்கு மட்டும்மல்லாது, பாதுகாப்பில் உள்ள போலீசாரும் அக்கினி வெயில் வெப்பத்தில் இருந்து ஆசுவாசம் கொள்வர்.

திருவிழா காலங்களில் முறையாக கூட்ட நெரிசலில் பாதுகாப்பாக பக்தர்களுக்கு விசிறி வீச அடையாள அட்டை கேட்டு மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த கார்த்திக் மாயா தலைமையில் 15 பேர் நேற்று கலெக்டர் அனீஷ்சேகரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல், மதுரை மீனாட்சி தேர் உலா உள்ளிட்ட சித்திரை திருவிழாவில், 20க்கு மேற்பட்டவர்கள் பெரிய அளவிலான விசிறி வீசி பக்தர்களை வெயிலில் இருந்து இளைப்பாற வைப்போம். திருவிழாவில் காலம் காலமாக விசிறி வீசி வருகிறோம். இந்த ஆண்டு விழாவில் விசிறி வீச எங்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். இதன்மூலம், பக்தர்களுக்கு பாதுகாப்பாக நின்று விசிறி வீச முடியும்’ என தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.

The post மதுரை சித்திரை திருவிழாவில் விசிறி வீச அடையாள அட்டை வழங்க கோரி மனு appeared first on Dinakaran.

Related Stories: