திருவள்ளூர்: மகளிர் சுய உதவிக் குழுவினர் மதி சிறகுகள் தொழில் மையத்தில் பதிவு செய்து தொழில் தொடங்கி பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு உதவி, மதி சிறகுகள் தொழில் மையம் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் ஊரக மகளிர் தொழில் முனைவுகனை மேம்படுத்துதல், நிதி சேவைக்கு வழி வகுத்தல் மற்றும் சுய தொழில் வேலைவாய்ப்பு உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூர், மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஆகிய வட்டாரங்களில் 198 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்கு தொழில் திட்டம் தயாரித்தல், மதிப்பீடு செய்தல், தொழில்நுட்ப விபரங்கள் அளித்தல், திறன் வளர்ப்பு குறித்த விபரங்கள் அளித்தல், சந்தை இணைப்பு ஏற்படுத்துதல் ஊரக தொழில் முனைவோர்கள் புதிய தொழில் துவங்குவதற்கும் (அ) தொழிலை மேப்படுத்துவதற்கு தேவையான சேவைகளை வழங்குவதற்காக மதி சிறகுகள் தொழில் மையம் என்ற ஓரிட சேவை மையத்தை அமைத்து சேவைகளை வழங்கி வருகிறது.
தற்போது இம்மையத்தின் மூலம் இ – சேவை மையம் சார்ந்த அனைத்து சேவைகளையும் வழங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மேற்காணும் சேவைகளை இம்மையத்தை அணுகி மகளிர் உதவிக் குழு உறுப்பினர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் பொது மக்கள் இந்த சேவைகளைப் பெற மீஞ்சூர், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் செயல்படும் மதி சிறகுகள் தொழில் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். மேலும் அலைபேசி எண் : 8939009163, 8825769032 என்றஎண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் இவ்வாறு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
The post மதி சிறகுகள் தொழில் மையத்தில் தொழில் தொடங்கி பயன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.