போக்குவரத்து விதிமீறல் மாநகரில் 2 நாட்களில் 842 வழக்குகள் பதிவு

மதுரை, அக். 27: போக்குவரத்து விதிகளை மீறியதாக மதுரை மாநகரில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் 842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரை மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துக்களை தடுக்கவும் போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவுப்படி போக்குவரத்து போலீசாரால் வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த இரு நாட்களில் போக்குவரத்து போலீசார் மாநகரின் முக்கிய சந்திப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அதில் இருசக்கர வாகனங்களில் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி பதிவெண் பலகை இன்றி வாகனங்களை இயக்கியதாக 58 வழக்குகள், குறைபாடுடன் கூடிய பதிவெண் பலகையுடன் வாகனம் இயக்கியதாக 756 வழக்குகள், புகைபோக்கியில் அதிக ஒலிஎழுப்பும் வகையில் மாற்றம் செய்ததாக 28 வழக்குகள் என மொத்தம் 842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், இம்மாதத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் பதிவெண் பலகை இன்றி வாகனங்களை இயக்கியதாக 107 வழக்குகளும், குறைபாடுடன் கூடிய பதிவெண் பலகையுடன் வாகனம் இயக்கியதாக 3,580 வழக்குகளும், புகைபோக்கியில் அதிக ஒலிஎழுப்பும் வகையில் மாற்றம் செய்ததாக 86 வழக்குகளும் என, 3,773 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post போக்குவரத்து விதிமீறல் மாநகரில் 2 நாட்களில் 842 வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: