பொள்ளாச்சியில் நவ. 27ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்; வேலை இல்லாத இளைஞர்களே தமிழகத்தில் இல்லை என்பதே இலக்கு: அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டி

கோவை: தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களே இல்லை என்பதே எங்களின் இலக்கு என அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்,   மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையிலும், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையிலும் நேற்று கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெற்றது. இது குறித்து அமைச்சர் சி.வி.கணேசன் அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தனியார் துறைகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 67 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில், ஒரு லட்சத்து 7 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியில் வரும் 27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.  இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வர் கலந்து கொண்ட வேலைவாய்ப்பு முகாமில் 72 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில், 8,752 இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். கடந்த 15ம் தேதி சென்னை புது கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் ஒரு லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். தமிழகத்தில் 71 தொழில்பயிற்சி மையங்களின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களே இல்லை என்பதே எங்களின் இலக்கு. இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில்,“தமிழகம் முழுவதும் மழை காரணமாக ஏற்கனவே பணியில் உள்ள மின்வாரிய ஊழியர்களுடன் கூடுதலாக 11 ஆயிரம் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பகல், இரவு என தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். சென்னையில் மட்டும் 1440 பேர் பகலிலும், 600 பேர் இரவிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’’ என்றார்….

The post பொள்ளாச்சியில் நவ. 27ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்; வேலை இல்லாத இளைஞர்களே தமிழகத்தில் இல்லை என்பதே இலக்கு: அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: