பொங்கல் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

தர்மபுரி, ஜன.14: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜவுளி மற்றும் பாத்திரங்கள், பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொங்கல் பண்டிகை இன்று(14ம் தேதி) போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. நாளை(15ம் தேதி) பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து, நாளை மறுநாள்(16ம் தேதி) மாட்டுப்பொங்கலும், 17ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவின்போது, புத்தாடை அணிந்து புத்தரிசி-புது வெல்லத்துடன் பொங்கல் வைத்து வேளாண் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபடுவர். புத்தாடை மற்றும் புத்தரிசி, புதுவெல்லம் மட்டுமின்றி படையலுக்கு பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களுமே புத்தம் புதியதாக பயன்படுத்துவார்கள். குறிப்பாக வீடுகளை சுத்தம் செய்து சுண்ணாம்பு அடிப்பது வழக்கம். போகியின்போது வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழித்து, தீயிட்டு அழித்து தை மகளை வரவேற்பர்.

வேளாண் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பில் சிறந்து விளங்கும் தர்மபுரி மாவட்டத்தில், பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும். மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நல்ல மழை பெய்தது. ஆனால், நடப்பாண்டு போதிய மழை பெய்யாத போதிலும், பொங்கல் பண்டிகையை வழக்கம்போல் உற்சாகத்துடன் கொண்டாட மக்கள் ஆயத்தமாகியுள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு அனைத்து ரேஷன் கார்டுதார்களுக்கும் ₹1000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பினை வழங்கியுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கிராமங்கள் தோறும், பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கியுள்ளது.
பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக சுற்றுப்புற கிராமங்களிலிருந்து நேற்று தர்மபுரிக்கு மக்கள் வந்து குவிந்தனர்.

ஜவுளி, பண்ட பாத்திரங்கள் கொள்முதலுக்காகவும், நகை வாங்குவதற்காகவும் சாரை சாரையாக வந்ததால் தர்மபுரி நகரம் ஸ்தம்பித்தது. தர்மபுரி சின்னசாமி தெரு, சித்தவீரப்ப செட்டி தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, நேதாஜி பைபாஸ் சாலை மற்றும் கடை வீதிகளில், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தர்மபுரி காமராஜர் சிலை சந்திப்பு சாலையில் இருந்து, ராஜகோபால் கவுண்டர் பூங்கா வரை உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல், சித்தவீரப்ப செட்டி தெருவில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. புதிய ரக ஜவுளிகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தது. பொங்கல் பண்டிகை விற்பனை களை கட்டியதால், போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தனர். சின்னசாமி தெருவில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

சாலையின் நடுவில் டூவீலர்கள் நிறுத்தும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனால், டூவீலர்கள் நீண்ட தூரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டது. இதேபோல், சித்தவீரப்ப செட்டி தெருவிலும் சாலையின் நடுவில் வாகனங்கள் நிறுத்திச் செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்தனர். பொங்கல் பண்டிகைக்காக முத்தாய்ப்பாக விளங்கும் கரும்பு-மஞ்சள், வாழைத்தார் மற்றும் மண்பானைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பென்னாகரம் மற்றும் காரிமங்கலம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, அரூர், மொரப்பூர், கம்பைநல்லூா், பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் ஜவுளி மற்றும் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளில் குவிந்தனர். பொங்கல் பண்டிகையொட்டி, தர்மபுரி மாவட்டம் முழுவதும் எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post பொங்கல் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: