பெரியகுளம் ஏலாவில் ராஜராஜ சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

நாகர்கோவில், ஜூலை 30: இன்டாக் அறக்கட்டளை கன்வீனர் அனிதா நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இந்திய தேசிய கலை, கலாச்சார, பாரம்பரிய பண்பாட்டு (இன்டாக்) அறக்கட்டளையின் சார்பில் கல்குளம் தாலுகாவில் சுங்கான்கடையில் மண்பாண்ட தொழில் செய்யும் இடம் பார்வையிடப்பட்டது. தொழில் செய்வதற்கு ஏற்ற மண் கல்குளம் தாலுகாவில் கிடைப்பது இல்லை என்றும், அதனை தோவாளை தாலுகாவில் இருந்து எடுத்து வருவதாகவும் அங்கிருந்த பணியாளர்கள் தெரிவித்தனர். இவர்கள் தொழிலுக்கு தேவையான மண் இந்த பகுதியில் கிடைக்க ஏற்பாடு செய்து தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேரமங்கலம் அருகில் உள்ள பெரியகுளம் ஏலாவில் ஒரு வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வட்டெழுத்து ராஜராஜசோழன் காலத்தில் பொறிக்கப்பட்டது.

இந்த பெரியகுளம் பாறையில் பொறிக்கப்பட்டுள்ள வட்டெழுத்து விளக்கத்தை செம்பவள ஆய்வுத்தளம் செந்தீ நடராஜன் விளக்கினார். அதன்படி தலக்குளத்தில் உள்ள அழகர் பெருமாள் கோயில் கிபி 1484ம் ஆண்டு வீர கேரள பல்லவரால் திருப்பணி செய்யப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. இந்த கோயிலின் வெளிப்புறத்தில் தெற்கு பக்க சுவரில் ஒரு வட்டெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் தலக்குளத்தில் உள்ள வீரன் வேலுத்தம்பி தளவாயின் வலியவீடும் பார்வையிடப்பட்டது. நிகழ்வில் இன்டாக் அங்கத்தினர்கள் ஆபிரகாம் லிங்கன், பிரேம்தாஸ், பசுமை சாகுல், லதா ராமசாமி, நாகேஸ்வரி ஜனார்த்தனன், ஜெயந்தி நீலசிவலிங்கசாமி, ரேகா உடனிருந்தனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பெரியகுளம் ஏலாவில் ராஜராஜ சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: