புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையின் கோப்புகள், பதிவேடுகளில் இந்தி கட்டாயம்: இயக்குநரின் உத்தரவுக்கு அனைத்து கட்சிகள் கண்டனம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் அனைத்து கோப்புகள், பதிவேடுகளில் இந்தி கட்டாயம் என இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திமுக சார்பில் இன்று அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. புதுச்சேரி கோரிமேட்டில் ஒன்றிய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ளஅனைத்து கோப்புகள், பதிவேடுகள் மற்றும் தலைப்புகளில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அலுவல் மொழி விதி 1976ன் படி ஒன்றிய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கோப்புகள், பதிவேடுகள், தலைப்புகள் ஆகியவற்றில் இந்தி, ஆங்கிலம் மொழி மட்டுமே இருக்க வேண்டும். நாடாளுமன்றக்குழுவுக்கு வழங்கப்பட்ட உறுதி எண் 7ன் படி அலுவல் மொழியாக இவை இருக்க வேண்டும். ஜிப்மரில் பயன்படுத்தப்படும் பதிவுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் என எல்லாவற்றின் தலைப்புகள், பணிக்கால கணக்குகள் ஆகியவை அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்படும். எதிர்காலத்தில் பதிவேடுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் அனைத்தும் முடிந்தவரை இந்தியில் மட்டும் எழுத வேண்டும்.அனைத்து துறைகளின் தலைவர்கள், பிரிவு பொறுப்பாளர்கள், ஊழியர்கள் அனைவரும் இவ்விதியை கண்டிப்பாக கடைபிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அலுவல் மொழி தொடர்பாக நாடாளுமன்ற குழுவுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகள், அதன் பொறுப்பு அதிகாரிகள் மூலம் இது கண்காணிக்கப்படும். இதுதொடர்பாக உதவி தேவைப்பாட்டால் இந்தி பிரிவை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஜிப்மரில் பல மாநிலங்களை சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், பல மாநிலங்களை சேர்ந்த நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற சூழலில் ஜிப்மர் இயக்குநரின் இந்த இந்தி திணிப்பு உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக இன்று ஆர்ப்பாட்டம்: புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிப்மர் நிர்வாகம் தற்போது கீழ்த்தரமான அரசியல் செய்து வருகிறது. இந்தி திணிப்பு என்பது தரமான சிகிச்சையை கேள்விக்குறியாக்கும். எனவே இந்தி திணிப்பை கைவிட வேண்டும். ஜிப்மரில் உள்ள மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களிலும் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் ஜிப்மர் எதிரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதேபோல ஜிப்மரில் இந்தி திணிப்புக்கு அனைத்து கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். …

The post புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையின் கோப்புகள், பதிவேடுகளில் இந்தி கட்டாயம்: இயக்குநரின் உத்தரவுக்கு அனைத்து கட்சிகள் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: