பாட்டில் குடிநீர் தயாரிக்கும்நிறுவனங்களில் கண்காணிப்பு

சேலம், ஏப். 6: கோடையையொட்டி, பாட்டில் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் பழைய, புதிய பஸ் நிலையங்கள் மற்றும் ஆத்தூர், மகுடஞ்சாவடி, தலைவாசல், ஓமலூர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் காலாவதியான குடிநீர், குளிர்பானம் பாட்டில் உள்ளதா? என அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாலிதீன் பாக்கெட் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீருக்கு, கண்டிப்பாக ஐஎஸ்ஐ முத்திரை பெற்றிருக்க வேண்டும். ஹெர்பல் மற்றும் பிளேவர்டு வாட்டர் என்ற பெயர்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்களில் ஐஎஸ்ஐ முத்திரை இருப்பதில்லை. குடிநீர் பாட்டில் வாங்கும்போது அதில் ஐஎஸ்ஐ முத்திரை, இந்த முத்திரைக்கு மேல் பகுதியில் ஐஎஸ் எண், முத்திரைக்கு கீழ் பகுதியில் சிஎம்எல் எண்கள் இருக்க வேண்டும். மேலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி விவரங்கள் ஆகிய அம்சங்களை பார்த்து நுகர்வோர் வாங்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் 47 ஆர்.ஓ., வாட்டர் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் உரியமுறையில் தண்ணீர் சுத்திகரித்து மாற்றுப்படுகிதா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, ஓமலூர் பகுதிகளில் உள்ள ஆர்.ஓ.வாட்டர் தயாரிக்கும் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அலுவலர்கள் அதிரடியாக ஆய்வு செய்தனர். அங்கு தண்ணீரை உரிய முறையில் சுத்திகரிப்பு செய்து மாற்றப்படுகிறதா? விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். இதேபோல் எத்தீபான் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்கள்தான் கோடை சீசனில் மிகவும் அச்சுறுத்தக்கூடிய உணவுப்பொருள். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை தொடர்ந்து உண்பதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கும். கல்லீரல், குடல், இரைப்பையும் பாதிக்கும். குழந்தைகள், முதியவர்கள் இதுபோன்ற பழங்களை அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஏற்படலாம் என்றும் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

The post பாட்டில் குடிநீர் தயாரிக்கும்

நிறுவனங்களில் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: