சென்னை: நீட் தேர்வில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி டி.கே.ரங்கராஜன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு மே 6ம் தேதி நடந்தது. இதில் தமிழில் மட்டும் 24 ஆயிரத்து 72 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாளில் 49 கேள்விகள் தமிழில் சரிவர மொழிபெயர்க்கப்படவில்லை. மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிரச்னையால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,”பிழையாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு 4 மதிப்பெண் என்ற வீதத்தில் மொத்தம் 196 மதிப்பெண் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்குமாறு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. மேலும் 2 வாரத்தில் புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிடவும் உத்தரவிட்டது.இந்நிலையில், தமிழகத்தில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் எல்லா மாநிலங்களிலும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.