பாகூர் அருகே குப்பை பொறுக்கும் தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்டவர் திருவண்ணாமலை முதுகலை பட்டதாரி

 

பாகூர், ஜூன் 25: பாகூர் அருகே குப்பை பொறுக்கும் தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்டவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுவை பாகூர் அடுத்துள்ள ஆராய்ச்சிக்குப்பம் வாய்க்காலில் கடந்த 20ம் தேதி 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாகூர் இன்ஸ்பெக்டர் சஜித், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் பார்வையிட்டு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர் குப்பைகளைப் பொறுக்கும் தொழிலாளி என்பதும், குப்பை பொறுக்கும் தகராறில் மணப்பட்டை சேர்ந்த நந்தகுமார் (28) என்பவருடன் ஏற்பட்ட தகராறில் அடித்து வாய்க்கால் தண்ணீரில் தலையை மூழ்கடித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து நந்தக்குமார் மீது கொலை வழக்குபதிந்த போலீசார் அவரை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக பாகூர் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில், உயிரிழந்த நபர் திருவண்ணாமலை மாவட்டம், நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (47) என்பது தெரியவந்தது. எம்ஏ முதுகலை பட்டதாரியான இவர் அங்குள்ள பள்ளியில் யோகா ஆசிரியராகவும் பணியாற்றி வந்து இடையில் வேலையை விட்டுவிட்டு, கடலூர், செம்மண்டலத்தில் தனது குடும்பத்தினருடன் 5 வருடமாக குடியேறி வசித்து வந்துள்ளார். பின்னர் அங்குள்ள பேப்பர் கடையில் வேலை செய்த நிலையில், மதுபோதைக்கு அடிமையான முருகன் அந்த வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறி மதுக்கடை பகுதியில் குப்பைகளை சேகரித்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு தனியாக சுற்றித் திரிந்துள்ளார்.

அவ்வப்போது வீட்டிற்கும் சென்று வந்துள்ளார். ஆனால் கடைசி 2 மாதமாக வீட்டிற்கே செல்லாமல் இருந்த நிலையில்தான், சம்பவத்தன்று குப்பை பொறுக்கும் தகராறில் அவர் அடித்தும், வாய்க்கால் தண்ணீரில் தலையை மூழ்கடித்தும் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து முருகனின் உடலை அவரது உறவினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். திருவண்ணாமலையில் இறுதிச் சடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. கொலை செய்யப்பட்ட முருகனுக்கு, மனைவி, 2 மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பாகூர் அருகே குப்பை பொறுக்கும் தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்டவர் திருவண்ணாமலை முதுகலை பட்டதாரி appeared first on Dinakaran.

Related Stories: