திருப்புத்தூர், ஆக 10: திருப்புத்தூர் அருகே பழங்கால சிலைகளை விற்ற புதுக்கோட்டை வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே மருதங்குடி கிராமத்தில் உள்ள கோயில் வீட்டில் சுமார் 200 வருடங்கள் பழமையான 12 சிலைகள் இருந்துள்ளது.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மருதங்குடி அய்யனார் கோயிலில் சுமார் 10 கிலோ வெள்ளங்கி திருடு போனது. இதுசம்பந்தமாக மருதங்குடியை சேர்ந்த கோயில் பூசாரி கருப்பையா, கைது செய்யப்பட்டார். அப்போது மருதங்குடி கோயில் வீட்டில் இருந்த 12 சிலைகளும் காணவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
போலீசார் விசாரணையில், கோயில் பூசாரியான கருப்பையா 6 அம்மன் சிலைகள், 2 அய்யனார் சிலைகள், 1 கருப்பர் சிலை மற்றும் யானை வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட 12 சிலைகளை திருடி, புதுக்கோட்டையை சேர்ந்த கணேஷ்குமார் (32) என்பவரிடம் விற்க கொடுத்துள்ளார். அவர் அச்சிலைகளை சென்னையில் உள்ள ஒரு வியாபாரியிடம் ரூ.3 லட்சத்திற்கு விற்றது தெரியவந்தது. இதனையடுத்து சென்னை வியாபாரியிடமிருந்து போலீசார் சிலைகளை பறிமுதல் செய்தனர். மேலும், நாச்சியாபுரம் எஸ்ஐ குமரவேல் நேற்று கணேஷ்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
The post பழங்கால சிலைகளை விற்ற புதுகை வாலிபர் கைது appeared first on Dinakaran.