பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த எம்எல்ஏ வேண்டுகோள்

பல்லடம், ஏப்.16: தமிழக சட்டசபையில் பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேண்டுகோள் விடுத்து பேசினார். இது குறித்து அவர் மேலும் பேசியதாவது: பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் செம்மிபாளையம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று 60 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வருகிறது. அது மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக இருப்பதால், செவிலியர் குடியிருப்பு கட்ட வேண்டும். நாகப்பட்டனம் – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல்லடத்தில் அரசு மருத்துவமனையில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து திருப்பூர், கோவைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பல்லடம் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு துவங்க வேண்டும்.

மேலும், தற்போது 91 படுக்கை வசதி உள்ளது. அதை 150 படுக்கை வசதியாக்க வேண்டும். சி.டி.ஸ்கேன் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்து தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து கூறியதாவது: பல்லடம் நகராட்சியை பொறுத்தவரை ஏற்கெனவே ஒரு வட்டார மருத்துவமனை இயங்கி கொண்டிருக்கிறது. பல்வேறு சிறப்புகள் கொண்ட பல்லடம் அரசு மருத்துவமனைக்கு எதிர்காலத்தில் தேவைப்படுகின்ற புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த பட்ஜெட்டில் 25 புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு பெறப்பட்டன. அதில் ஒன்றை பல்லடம் தொகுதிக்கு தந்து ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அந்த பணியும் அங்கே நடைபெற்று கொண்டிருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

The post பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த எம்எல்ஏ வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: