காந்திநகர்: பதப்படுத்தப்பட்ட நிலையில் பேக்கிங் செய்து விற்கப்படும் பரோட்டாவுக்கு 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதித்தது செல்லும் என்று குஜராத் மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோதுமை, மைதாவால் செய்யப்பட்டு பதப்படுத்தி விற்கப்படும் சப்பாத்தி, ரொட்டிகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதே மாவால் செய்யப்பட்டு பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டாவுக்கு (பாக்கெட்டில்) 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதற்கு எதிராக குஜராத் மாநிலம் அகமதாபாதைச் சேர்ந்த தனியார் நிறுவனம், குஜராத் மாநில தீர்ப்பாயத்தில் வழக்கு ெதாடர்ந்தது. அதை விசாரித்த தீர்ப்பாயம், பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டா, சப்பாத்தியைக் காட்டிலும் வேறுபட்டது என்பதால் அதற்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவது சரியே என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக அந்த நிறுவனம் குஜராத் மேல்முறையீட்டு ஆணையத்தில் முறையிட்டது. அதன் மீதான உத்தரவில், ‘பதப்படுத்தி விற்கப்படும் ரொட்டியையும் சப்பாத்தியையும் அப்படியே உண்ணலாம். ஆனால், பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டாவை மேலும் சமைத்து மட்டுமே உண்ண முடியும். மாவும் தண்ணீரும் மட்டுமே சேர்த்து சப்பாத்தி, ரொட்டி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. பரோட்டாவானது மாவுடன் வெவ்வேறு வகைகளுக்கு ஏற்ப உருளைக் கிழங்கு, உப்பு, எண்ணெய், பருப்புகள், கறிவேப்பிலை உள்ளிட்டவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. எனவே பதப்படுத்திய பரோட்டாவுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி கோர முடியாது. தனியார் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் ரொட்டியில் மாவு மட்டுமே உள்ளது. ஆனால், அந்நிறுவனத்தால் விற்கப்படும் பரோட்டாவில் அதன் வகைக்கு ஏற்ப 36 முதல் 62 சதவீத மாவு மட்டுமே உள்ளது. எனவே, பதப்படுத்தப்பட்ட பரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது சரியான முடிவுதான்’ என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது….
The post பதப்படுத்தப்பட்ட பேக்கிங்கில் விற்கப்படும் பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி விதித்தது சரியே: குஜராத் மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.