பட்டுக்கோட்டையில் பரபரப்பு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு தஞ்சாவூர், கும்பகோணத்திலிருந்து வைஷ்ணவ் தேவி கோயில் செல்ல சிறப்பு சுற்றுலா ரயில்

கும்பகோணம்: தஞ்சாவூர், கும்பகோணத்திலிருந்து வைஷ்ணவ் தேவி கோவில் செல்ல சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக ஜம்மு காஷ்மீர் மாநிலம், கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ் தேவி கோயிலுக்கு நேரடியாக செல்ல சுற்றுலா ரயில் ஒன்றை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆர்சிடிசி) இயக்க உள்ளது. பாரத் கவ்ரவ் சுற்றுலா ரயில் வரிசையில் இந்த ரயில் வரும் ஜூலை 1ம் தேதி திருவனந்தபுரம் கொச்சுவேலியில் காலை புறப்பட்டு தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்திற்கு அன்று மாலை வந்துசேரும். அங்கிருந்து ஆன்மீக சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு, சென்னை வழியாக சென்று ஜூலை 3ம் தேதி ஹைதராபாத் நகரில் சார்மினார் உட்பட பல இடங்கள், 5ம் தேதி ஆக்ராவில் தாஜ்மஹால், மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடம், 6ம் தேதி கத்ராவில் மாதா வைஷ்ணவ் தேவி கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்படும். அங்கு தரிசனம் முடிந்த பின் ஜூலை 8ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பொற்கோவில் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் எல்லையான இட்டாரி (வாஹா) பார்த்த பின் ஜூலை 9 மற்றும் 10ம் தேதி புதுடெல்லியில் குதுப்மினார், இந்தியா கேட், இந்திராகாந்தி அருங்காட்சியகம், அக்சர்தாம் கோயில், லோட்டஸ் கோயில் ஆகியவற்றை சுற்றி காண்பிக்கப்படும்.

பின்னர் சுற்றுலா நிறைவடைந்து, இந்த சிறப்பு சுற்றுலா ரயில் ஜூலை 12ம் தேதி மாலை கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு மீண்டும் வந்தடையும். முற்றிலும் சுற்றுலா பயணிகளை மட்டும் ஏற்றிச்செல்லும் இந்த சிறப்பு ரயிலில் மற்ற சாதாரண பயணிகள் பயணிக்க முடியாது. இந்த 12 நாட்கள் சுற்றுலாவிற்கு பயண கட்டணம், சைவ உணவு, தங்கும் வசதி, உள்ளூர் போக்குவரத்து ஏற்பாடு, நிறுவன மேலாளர், சுற்றுலா வழிகாட்டி மற்றும் பாதுகாவலர் உள்ளிட்ட வசதிகள் சுற்றுலா நிறுவனத்தால் செய்யப்படும். ஒரு நபருக்கு இதற்கான கட்டணம் சாதாரண படுக்கை வசதி ரூ.22,350, குளிர்சாதன படுக்கை வசதி ரூ.40,380 ஆகும். கூடுதல் விபரங்கள் மற்றும் முன்பதிவிற்கு இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவன சென்னை பொறுப்பாளர் விஜய் சாரதியை 82879 31965 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

The post பட்டுக்கோட்டையில் பரபரப்பு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு தஞ்சாவூர், கும்பகோணத்திலிருந்து வைஷ்ணவ் தேவி கோயில் செல்ல சிறப்பு சுற்றுலா ரயில் appeared first on Dinakaran.

Related Stories: