நெல்லை – தென்காசி சாலையில் கண்டியப்பேரி வாய்க்கால் பாலம் கட்டுமான பணி தீவிரம் செப்டம்பர் முதல் போக்குவரத்து துவங்கப்படும்

 

நெல்லை, ஆக.18: நெல்லையிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் கண்டியப்பேரி பகுதியில் வாய்க்கால் பாலம் கட்டுமானத்தில் தற்போது கான்கிரீட் அமைக்கும் பணிக்காக கம்பிகள் கட்டும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. நெல்லை டவுன் பழையபேட்டையில் இருந்து தென்காசி செல்லும் பிரதான சாலையில் கண்டியப்பேரி இசக்கியம்மன் கோயில் அருகில் வாய்க்கால் பாலம் பழுதடைந்து இருந்தது. அதை அகற்றி புதிதாக பாலம் கட்டுமான பணி நடந்துவருகிறது. இதனால் நெல்லை-தென்காசி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாய்க்கால் பாலம் அருகே மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் பஸ்கள், வாகனங்கள் சந்திப்பு பஸ்நிலையம், டவுன், தெற்கு மவுண்ட்ரோடு, டிவிஎஸ் கார்னர், கோடீஸ்வரன் நகர், செக்கடி நிறுத்தம், மதிதா இந்து கல்லூரி, திருப்பணிகரிசல்குளம் விலக்கு, இபி அலுவலகம், பழையபேட்டை வழியாக தென்காசிக்கு இயக்கப்படுகின்றன. இதுபோல் தென்காசியில் இருந்து நெல்லைக்கு வரும் வாகனங்கள் பழையபேட்டை, இபி அலுவலகம், ரொட்டிகடை நிறுத்தம், செக்கடி, கோடீஸ்வரன் நகர், டிவிஎஸ் கார்னர், வழுக்கோடை, தொண்டர் சன்னதி வழியாக புதிய பஸ்நிலையத்திற்கு இயக்கப்படுகின்றன. தச்சநல்லூர் வழியாக தென்காசி செல்லும் லாரிகள் தச்சநல்லூர், ராமையன்பட்டி, ரஸ்தா, மானூர், சீதபற்பநல்லூர் வழியாக தென்காசிக்கு இயக்கப்படுகின்றன. இப்போக்குவரத்து மாற்றம் கடந்த ஜூலை 10ம்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

இதைதொடர்ந்து கண்டியப்பேரி வாய்க்கால் பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. பாலத்தின் தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டது. தற்போது நெல்லை – தென்காசி சாலை நான்குவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கேற்ற வகையில் வாய்க்கால் பாலமும் 9மீ இருந்து 12 மீட்டராக அகலப்படுத்தப்பட்டு உள்ளது. பாலத்தின் மேல்பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணிக்காக பலகைகள் அடித்து கம்பிகள் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதன்பின் கான்கிரீட் அமைக்கும் பணி இன்னும் சிலநாட்களில் நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து கான்கிரீட் செட்டாகும் வகையில் சுமார் 25 நாட்கள் பாலத்தின் மேல்பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கும் பணி நடைபெறும். இதன்பின்னர் பாலத்தின் இருபுறமும் சா லைகள் இணைக்கப்படும். அதன்பின்னர் தார்சாலை அமைக்கப்பட்டபின் செப்டம்பர் மாதம் முதல்வாரத்தில் சோதனை ஓட்டத்துக்குபின் பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நெல்லை – தென்காசி சாலையில் கண்டியப்பேரி வாய்க்கால் பாலம் கட்டுமான பணி தீவிரம் செப்டம்பர் முதல் போக்குவரத்து துவங்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: