நெல்லையில் பயங்கரம்; பெண் கழுத்தை நெரித்து படுகொலை

* பலாத்காரம் செய்யப்பட்டாரா? * கை, கால்களை கட்டி நிர்வாண நிலையில் உடல் ஆற்றில் வீச்சுநெல்லை: நெல்லை பாளையங்கோட்டை அருகே திருமலைக்கொழுந்துபுரத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. விவசாயி. இவரது மனைவி மாதா (49). இவரது வீட்டிலிருந்து 250 மீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆறு உள்ளது. வீட்டு வேலைகளை முடித்து விட்டு தினமும் மதியம் 2 மணி அளவில் துவைப்பதற்கான துணிகளை எடுத்துக் கொண்டு ஆற்றில் மாதா குளிக்கச் செல்வது வழக்கம். அப்போது ஆற்றில் ஆட்கள் நடமாட்டமே இருக்காது. உள்ளூர் என்பதால் மாதா எந்தப் பயமும் இன்றி ஆற்றில் கூட்டம் இல்லாத மதிய நேரத்தில் சென்று துணிகளை துவைத்து குளித்து வருவது வழக்கம். நேற்றும் மதியம் 2 மணி அளவில் துவைப்பதற்காக துணிகளை எடுத்துக் கொண்டு தாமிரபரணி ஆற்றுக்கு சென்றார். குளித்து முடித்து வழக்கமாக மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்து விடும் மாதா, 6 மணியாகியும் வீடு திரும்பாததால் அவரது கணவர் சுடலைமுத்து, மகள்கள், மகன் மற்றும் உறவினர்கள் ஆற்றில் போய் தேடிப் பார்த்தனர். ஆனால் இரவு நேரமாகி விட்டதாலும், மாதாவைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காததாலும் வீடு திரும்பி விட்டனர். இந்நிலையில் இன்று காலை திருமலைக்கொழுந்துபுரம் தாமிரபரணி ஆற்று கரையிலிருந்து 20 மீட்டர் தூரத்தில் முட்புதரில் மாதாவின் உடல் கை, கால்களை கயிறால் கட்டிய நிலையில் ஆடைகள் இல்லாமல் மிதந்தது. ஆற்றுக்கு இன்று காலை சென்றவர்கள் இதைப் பார்த்து பாளை. தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த நெல்லை எஸ்.பி. சரவணன், தாழையூத்து டிஎஸ்பி ஜெபராஜ், பாளை. தாலுகா இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. தடயவியல் நிபுணர் சம்பவ இடத்தில் ஆதாரங்களை சேகரித்தார். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று தரையில் படுத்துக் கொண்டது. மேலும் ஆற்றுக்கு வரும் வழியில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் அப்பகுதியில் இருந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது மாதாவுடன், அவரது மருமகளும் குளிக்கச் சென்றுள்ளார். அவர் விரைவாக குளித்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். மாதா மட்டும் தனியாக குளித்துக் கொண்டிருந்தார். இதை நோட்டமிட்ட கஞ்சா புகைக்கும் நபர்கள், அவரை கை, கால்களை கயிறுகளால் கட்டி பலாத்காரம் செய்து கொன்று, உடலை தாமிரபணி ஆற்றில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.திருமலைகொழுந்துபுரத்திற்கு வெளியூரிலிருந்து வந்து இந்த சம்பவத்தில் யாரும் ஈடுபட்டார்களா? அல்லது உள்ளூர் நபர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மாதாவுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த சம்பவம் நெல்லை மாநகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post நெல்லையில் பயங்கரம்; பெண் கழுத்தை நெரித்து படுகொலை appeared first on Dinakaran.

Related Stories: