நெடுஞ்சாலைத்துறையில் பணியிட மாறுதல் வழங்க கோரி அமைச்சருக்கு மனு

விருதுநகர், டிச.30: நெடுஞ்சாலைத்துறையில் உதவி, இளநிலை பொறியாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் சார்பில் அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் மாரிமுத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார்.

மனுவில், நெடுஞ்சாலைத்துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, நபார்டு மற்றும் கிராமச்சாலைகள், திட்டங்கள், பெருநகரம், தேசிய நெடுஞ்சாலை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்டம்-2, தர உறுதி மற்றும் ஆராய்ச்சி, திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு, சென்னை கன்னியாகுமரி தொழில்தட திட்டம் ஆகிய 9 அலகுகள் செயல்பட்டு வருகிறது.

இவற்றில் பணியாற்றி வரும் உதவி கோட்டப்பொறியாளர்கள் மற்றும் உதவிப்பொறியாளர், இளநிலைப் பொறியாளர்கள், பொது பணியிட மாறுதல் பல வருடங்கள் இன்றி இருந்து வருகின்றனர். விருப்ப மாறுதல் என்ற பெயரில் பணியாற்றி வரும் சில பொறியாளர்கள் செல்வாக்கை பயன்படுத்தி பணிமாறுதல் பெற்று வருகின்றனர்.

ஒரே இடத்தில் 6 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வரக்கூடிய நிலை நெடுஞ்சாலைத்துறையில் உள்ளது. சில பொறியாளர்கள் மன உளைச்சலோடு பணியாற்றி வருகின்றனர். 2024ம் வருடத்திலாவது நெடுஞ்சாலைத்துறையில் 3 வருட பணி நிறைவு பெற்று பணியாற்றி வரும் உதவி கோட்டப்பொறியாளர்கள்,  உதவி பொறியாளர்கள், இளநிலைப்பொறியாளர் ஆகியோர்களுக்கு பொது பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post நெடுஞ்சாலைத்துறையில் பணியிட மாறுதல் வழங்க கோரி அமைச்சருக்கு மனு appeared first on Dinakaran.

Related Stories: