நீர்வரத்து இல்லாததால் ஆழியார் அணை நீர்மட்டம் 75 அடியாக சரிந்தது: விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் அணை மொத்தம் 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாய பகுதிக்கும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது. அதுபோல் கேரளாவுக்கும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட டிஎம்சி தண்ணீர் அவ்வப்போது திறக்கப்படுகிறது. கடந்த 2021ம்  ஆண்டில் ஜூன் முதல் அக்டோபர் வரையிலும் பெய்த தென்மேற்கு பருவமழையின் போது, ஆழியார் அணையின் நீர்மட்டம் குறிப்பிட்ட நாட்களில் முழு அடியான 120 அடியையும் எட்டியதால் அணையானது கடல்போல் காணப்பட்டது. மேலும், அதே ஆண்டில் நவம்பர் மாதத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையினால், அணையின் நீர்மட்டம் பல மாதங்களாக சுமார் 110அடிக்கு மேல் இருந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மழை குறைந்ததால், அணைக்கு தண்ணீர் வரத்து குறைய துவங்கியது. அதிலும், பிப்ரவரி மாதம் துவக்கத்திலிருந்து மழையின்றி வெயிலின் தாக்கமே அதிகமாக இருந்துள்ளது. இதனால் தண்ணீர் வரத்து குறைந்து, அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிய துவங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த மூன்ற மாதமாக மழை பொய்த்ததால், நேற்றைய நிலவரபடி ஆழியார் அணையின் நீர்மட்டம் 75 அடியாக குறைந்துள்ளது.  நீர்மட்டம் நாளுக்குநாள்  குறைந்து வருவதால் அணையின் பெரும்பாலான பகுதி பாறைகள் மற்றும் மணல் மேடான இடமாக தெரிகிறது. கோடை வெயிலின் தாக்கம் துவங்குவதற்கு முன்பாகவே, மீண்டும் அணை வறண்டு வருவது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதே சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால், வரும் காலங்களில் ஆழியார் அணையிலிருந்து பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அவலம் உண்டாகும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்….

The post நீர்வரத்து இல்லாததால் ஆழியார் அணை நீர்மட்டம் 75 அடியாக சரிந்தது: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: