கேரளாவில் மீண்டும் ஒரு பயங்கரம் வெடிகுண்டு வீசியதில் யானை காயம் அணை தண்ணீரில் நின்றபடி இறந்தது: வனத்துறை தீவிர விசாரணை

பாலக்காடு: கேரளாவில் வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த பெண் யானை, அணை நீரில் நின்றபடியே இறந்தது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா கருடா தடுப்பு அணை அருகே நேற்று காட்டு யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது, அணையில் 40 வயதான பெண் யானை தண்ணீரில் நின்று கொண்டே இருந்தது. அதை சுற்றி காட்டு யானைகள் நின்றிருந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.அணையின் கரையில் நின்ற யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். ஆனால், காலில் பலத்த காயத்துடன் நீ்ரில் நின்றிருந்த பெண் யானை அணை நீரில் மூழ்கி சிறிது நேரத்தில் இறந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், காட்டு யானைகள் அருகே உள்ள டீ எஸ்டேட்டுக்குள் புகுந்து முகாமிட்டதால் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி விரட்டி உள்ளனர்.

இதில், அந்த பெண் யானைக்கு வலதுபுற பின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் அந்த யானை தண்ணீருக்குள் நின்று  இறந்துள்ளது என தெரியவநதுள்ளது. இது குறித்து  வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கேரளாவில் கடந்தாண்டும் இதேபோல், வெடிகுண்டு வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை ஒரு யானை தின்றபோது, அது வெடித்து வாயில் பலத்த காயம் அடைந்தது. அந்த வலி தாங்க முடியாமல், அங்குள்ள அணையின் தண்ணீரில் நின்று இறந்தது. இந்த வீடியோ வைரலாகி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: