தொடர் விடுமுறை எதிரொலி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்

 

மாமல்லபுரம், அக். 23: தொடர் விடுமுறையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர். மாமல்லபுரம் உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்வதால் தினமும் 500க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களில் லட்சக்கணக்கான உள்நாடு, வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தற்போது சீசன் காலம் தொடங்கி உள்ள நிலையில், மாமல்லபுரத்திற்கு அதிகளவில் வெளிநாட்டு பயணிகள் வருகை காணப்படுகிறது.

குறிப்பாக, ஞாயிற்று கிழமை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று மதியம் முதல் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அரசு பஸ்களிலும், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களிலும் கூட்டம், கூட்டமாக வரத் தொடங்கியதால் கடற்கரை கோயில், வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய புராதன சின்னங்கள் பகுதியில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

மேலும், கடலில் குளிக்க வேண்டாம் என கடலோர பாதுகாப்பு படை போலீசார் அறிவுறுத்தியும் ஆபத்தை உணராமல் பலர் கடலில் குளித்தனர். குறிப்பாக, தங்கள் பெற்றோர்களுடன் தொடர் விடுமுறையை கழிக்க வந்த சிறுவர், சிறுமிகளும் கடலில் ஆனந்தமாக குளித்தனர். கிழக்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் லேசான நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மேலும், வாகனங்கள் நெரிசலில் சிக்கி விடாமல் இருக்க சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

The post தொடர் விடுமுறை எதிரொலி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர் appeared first on Dinakaran.

Related Stories: