சட்டமன்ற தேர்தலுக்காக 4 தொகுதி வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்புவதற்கு தயாரான பொருட்கள்-மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

கரூர் : சட்டமன்ற பொதுத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த தேவையான பொருட்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக தயார் நிலையில் பிரித்து வைக்கப்பட்டுள்ளதையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் அமைந்துள்ள பகுதிகளையும் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரசாந்த் வடநேரே பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த தேவையான பொருட்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக குளித்தலை தாலுகா அலுவலத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும், வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவின் போது பயன்படுத்த தேவையான பொருட்கள் தயார் நிலையில் இருப்பதையும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தேர்தல் ஆணையத்தால் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் வழங்கப்பட்டுள்ள கையுறைகள், பணியாற்றும் அலுவலர்களுக்கான முகக்கவசங்கள், சானிடைசர்கள், பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட 11 வகையான பொருட்கள் தயார் நிலையில் இருப்பதையும் கலெக்டர் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கான மண்டல அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலர், மண்டல அலுவலர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார். முன்னதாக, குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதே போல், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுதற்காக பொருட்கள் தயார் நிலையில் பிரித்து வைக்கப் பட்டுள்ளதையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தாசில்தார்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Related Stories: