திருவாரூர்: திருவாரூர் அருகே குழந்தை திருமணத்தால் தற்கொலைக்கு முயன்ற 11 ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் கிராமத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த 2015 ஆம் ஆண்டு விழுப்புரம் ஆண்டிகுப்பத்தைச் சேர்ந்த 25 வயதான சிவக்குமாருக்கு, மாணவியின் சித்தப்பா ஏழுமலையின் ஏற்பட்டால் திருமணம் செய்து வைத்தனர். திருமணமான 3 நாட்களில் மாணவி சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் மாணவியின் குடும்பத்தார் வரதட்சணையை சிவகுமார் வீட்டாரிடம் திருப்பி கேட்டுள்ளனர். இதனால் பிரச்சனை ஏற்பட்டதில் மாணவி மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் மனமுடைந்த மாணவி கடந்த 4 ஆம் தேதி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் குடித்து விட்டு வைத்திருந்த எஞ்சிய பானத்தை விஷம் என்று அறியாமல் தங்கையும் குடித்ததால் இருவரையும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், மாணவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையம் மற்றும் விழுப்புரம் காவல் துறையினர் அனைவரும் மாணவியின் சித்தப்பா ஏழுமலை, மாணவியின் பெற்றோர், சிவகுமார், சிவகுமாரின் பெற்றோர் ஆகியோர் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவகுமார் மட்டும் விழுப்புரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். எஞ்சிய 5 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. …
The post திருவாரூரில் குழந்தை திருமணத்தால் மனமுடைந்த 11 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: மாணவியின் பெற்றோர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு; ஒருவர் கைது!! appeared first on Dinakaran.