திருவள்ளூரிலிருந்து தேவந்தவாக்கம் கிராமத்திற்கு மாலை நேரத்திலும் அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருவள்ளூர் எம்பியிடம் கோரிக்கை மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தேவந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி காளிதாஸ் என்பவர் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரும், திஷா கமிட்டியின் தலைவருமான கே.ஜெயக்குமாரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார்.  அதன் விவரம் வருமாறு:பூண்டி ஒன்றியம், தேவந்தவாக்கம் மற்றும் சோமதேவன்பட்டு ஆகிய 2 கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தேவந்தவாக்கம் கிராமத்திற்கு அரசு பேருந்து (தடம் எண். டி.14) காலை நேரத்தில் மட்டும் வந்து செல்கிறது. ஆனால் மாலை நேரத்தில் அந்த பேருந்து இயக்கப்படுவதில்லை. இந்த கிராமங்களில் இருந்து சென்னை மற்றும் பெரும்புதூர் பகுதிக்கு திருவள்ளூர் வழியாக ஏராளமானோர் தினமும் வேலைக்கும் பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். மேலும் கர்ப்பணிகள், வயதான முதியவர்கள் மற்றும் குழந்தைகள் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வர வேண்டுமானால் சுமார் 3 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று மெய்யூரில் தான் பேருந்து மூலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் மாலையில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மீண்டும் மாலை வீட்டிற்கு திரும்ப பேருந்து வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் மெய்யூரிலிருந்து 3 கி.மீட்டர் தூரம் நடந்து தேவந்தவாக்கம் வரை செல்லும் பெண்களும், குழந்தைகளும் மற்றும் முதியோர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே திருவள்ளூரிலிருந்து தேவந்தவாக்கம் வரை டி 14 என்ற அரசுப் பேருந்தை மாலை நேரத்திலும் இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட எம்பி ஜெயக்குமார், இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்….

The post திருவள்ளூரிலிருந்து தேவந்தவாக்கம் கிராமத்திற்கு மாலை நேரத்திலும் அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருவள்ளூர் எம்பியிடம் கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Related Stories: