2024-25 இரண்டாம் அரையாண்டிற்கான குடிநீர் வரியை 30ம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை: வாரியம் தகவல்

சென்னை: 2024-25 இரண்டாம் அரையாண்டிற்கான குடிநீர் வரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும், என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் சொந்தமாக வீடு வைத்து இருப்பவர்கள், நிலம் வைத்து இருப்பவர்கள் ஆகியோரிடம் மாநகராட்சி சார்பில் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. இது, மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனமாக உள்ளது. சென்னையில் உள்ள சுமார் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. இதன் மூலம், மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை குடிநீர் வாரியத்திற்கு ஆண்டுதோறும் இருமுறை பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், உரிய காலக்கட்டத்தில் வரியை செலுத்துவோர்களை ஊக்குவிப்பதற்காக இம்மாதம் 30ம் தேதிக்குள் முழுமையாக செலுத்துவோருக்கு முதன் முறையாக 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த 5 சதவீத ஊக்க தொகையானது நடப்பு கேட்பு தொகைக்கு மட்டுமே வழங்கப்படும். இம்முறை இன்று முதல் அமலுக்கு வரும்.எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது 2024-25 இரண்டாம் அரையாண்டிற்கான குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை வரும் 30ம் தேதிக்குள் முழுமையாக வாரியத்திற்கு செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகையாக (அதிகபட்சம் ரூ.1500) பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 2024-25 இரண்டாம் அரையாண்டிற்கான குடிநீர் வரியை 30ம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை: வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: