திருப்பூரில் 7 மையங்களில் 4,062 பேர் நீட் தேர்வில் பங்கேற்பு: 97 பேர் ஆப்சென்ட்

 

திருப்பூர், மே 8: திருப்பூரில் நடைபெற்ற நீட் தேர்வில் 4,062 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். 97 பேர் தேர்வெழுதவில்லை. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் பெருமாநல்லூர் கேஎம்சி, பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சோளிபாளையம் லிட்டில் கிங்டம் பள்ளி, திருப்பூர் ஜெயந்தி பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, காங்கயம் ரோடு அபாகஸ் மாண்டிசோரி இன்டர்நேஷனல் பள்ளி, கூலிபாளையம் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி, அவிநாசி ஏ.கே.ஆர்., அகாடமி ஆகிய 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வுக்காக திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள மாணவ-மாணவிகள் காலை 9 மணி முதலே பள்ளிகள் உள்ள இடத்திற்கு வருகை தந்தனர். சிலர் வீடுகளில் தயார் செய்த உணவை கொண்டு வந்து சாப்பிட்டு விட்டு காத்திருந்தனர். தொடர்ந்து, காலை 11 மணி முதல் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரப்படி தேர்வு மையங்களுக்குள் அனுமதித்தனர். அப்போது பள்ளியின் நுழைவு வாயிலில் மாணவ-மாணவிகளின் ஆதார் கார்டு, அனுமதி அட்டை, புகைப்படம் ஆகியவற்றை பரிசோதித்த பின்னர் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே அனுப்பினர்.

தொடர்ந்து, பள்ளிக்குள் இருக்கும் ஒரு அறையில் மாணவ-மாணவிகளின் தேர்வு எண் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். இதன் பின்னரே உள்ளே அனுமதித்தனர். பின்னர் மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாலை 5 மணிக்கு தேர்வு முடிந்தது. கடந்த ஆண்டு 4 மையங்களில் மட்டுமே தேர்வு நடந்த நிலையில் நடப்பாண்டு திருப்பூர் மாவட்டத்தில் தேர்வை எதிர்கொள்பவர்கள் அதிகம் என்பதால் கூடுதலாக 3 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நடப்பாண்டு நீட் தேர்வுக்கு 4,159 பேர் விண்ணப்பிருந்தனர். அதில் 4,062 பேர் தேர்வெழுதினர். 97 பேர் தேர்வு எழுதவில்லை. அதில் மாற்றுத்திறனாளிகள் 4 பேர் தேர்வெழுதினர். 1 வர் தேர்வெழுதவில்லை.

இந்நிலையில் நிறைய மாணவிகள் தேர்வு விதிமுறைகள் தெரியாமல் கொலுசு, கம்மல் போன்ற அணிகலன்களை அணிந்து வந்த நிலையில் தேர்வு அறைக்குள் செல்லும் போது சோதனை செய்து அவற்றை அகற்றி பெற்றோர்கள் வசம் ஒப்படைத்தனர். மேலும், தேர்வு எழுதும் தேர்வு மையத்திற்கு வெளியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post திருப்பூரில் 7 மையங்களில் 4,062 பேர் நீட் தேர்வில் பங்கேற்பு: 97 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Related Stories: