தியாகதுருகம், ஜூன் 26: தியாகதுருகம் அடுத்த முடியனூர் கிராமத்தில் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வடத்தொரசலூர், விருகாவூர், கொங்கராயபாளையம், ஒகையூர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர்களை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர்.
நெற்பயிர் ரகங்களான ஏடிடி 37, 41, 51, ஆர்என்ஆர், வெள்ளை பொன்னி உள்ளிட்ட ரகங்களையும் விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர். நெற்பயிர்களை பாதுகாக்கும் வகையில் விவசாயிகள் உரமிடுதல், களை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு சமீபத்தில் பெய்த கோடை மழையும் கைகொடுக்க தற்பொழுது நெற்பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து பச்சை பசேலென காணப்படுகிறது.
எனவே இந்தாண்டும் நல்ல மகசூலுடன் நெற்பயிர்களுக்கு கூடுதலாக விலை கிடைக்கும் என இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வேளாண் துறை சார்பில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என வேளாண் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இயந்திரம் மூலமும் நெல் நடவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
The post தியாகதுருகம் பகுதியில் பச்சைபசேல் என செழித்து வளர்ந்துள்ள நெற்பயிர்கள் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.
