தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்-விவசாயிகள் அச்சம்

சத்தியமங்கலம் :  தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி  வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 6 காட்டு யானைகள் தாளவாடி அருகே உள்ள மல்லன்குழி கிராமத்திற்குள் புகுந்தன. அங்கு பயிரிட்டுள்ள மக்காச்சோளம், ராகி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. வழக்கமாக, காட்டு யானைகள் காலை நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று விடும் நிலையில் நேற்று காலை காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் விவசாய விளை நிலங்களில் சுற்றித்திரிந்தன. இதைக்கண்ட அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஜீரகள்ளி வனத்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர். காட்டுயானைகள் கிராமத்திற்குள் நுழையாமல் தடுப்பதற்காக  வனத்துறையினரும், கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து  விவசாய விளை நிலத்தில் சுற்றிதிரிந்த காட்டு யானைகளை சத்தம் போட்டும், பட்டாசுகள் வெடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டினர். விவசாய விளை நிலங்களில் புகுந்த காட்டு யானைகள் அங்குமிங்கும் ஓடியபடி வனப்பகுதிக்குள் செல்லாமல் அடம்பிடித்தன. இதைத்தொடர்ந்து, அருகே உள்ள முட்புதர் காட்டில் முகாமிட்டுள்ளன. காட்டு யானைகள் முட்புதர்கள் இருந்து வெளியேறுகிறதா? என்பதை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். பகல் நேரத்தில் காட்டு யானைகள் விவசாய விளை நிலங்களை சுற்றி திரிந்ததால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்….

The post தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்-விவசாயிகள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: