தாய், மகன், பேரன் கொலை வழக்கு 2 பேரை காவலில் எடுத்து விசாரணை

நெல்லிக்குப்பம், ஆக. 3: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் சீத்தாராம் நகரை சேர்ந்தவர் கமலேஸ்வரி (60). கடந்த மாதம் 15ம்தேதி கமலேஸ்வரி, அவரது மகன் சுகந்தகுமார், பேரன் இஷான் உள்ளிட்ட 3 பேரும் வீட்டில் தனித்தனி அறையில் படுகொலை செய்யப்பட்டு எரிந்த நிலையில் கிடந்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் கொலை வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்குபின் கொலை நடந்த கமலேஸ்வரியின் எதிர்வீட்டைச் சேர்ந்த பழனி மகன் சங்கர் ஆனந்த் (21), அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான சாகுல் அமீது (20) இருவரையும் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சாகுல் அமீதை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் கொலை சம்பவத்தின்போது விரலில் காயமடைந்திருந்த சங்கர் ஆனந்த் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடலூர் எஸ்பி ராஜாராம் உத்தரவின்பேரில் சங்கர் ஆனந்த் உள்ளிட்ட 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொள்ள கடலூர் நீதிமன்றத்தில் ஒப்புதல் மனு கொடுத்திருந்தனர். நேற்று மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஒரு நாள் காவல் விசாரணைக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து கடலூர் சிறையில் இருந்த சங்கர் ஆனந்த், சாகுல் ஹமீத் ஆகிய 2 பேரையும் நேற்று மாலை போலீஸ் காவலில் எடுத்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், பண்ருட்டி டிஎஸ்பி பழனி ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று விசாரணை முடித்துவிட்டு மாலையில் இருவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். இந்த காவல் விசாரணையின்போது கொலை சம்பவம் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தாய், மகன், பேரன் கொலை வழக்கு 2 பேரை காவலில் எடுத்து விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: