தர்மயுத்த நாயகனின் திட்டம் தகர்ந்துபோனதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஹனிபீ மாவட்ட நிலைமை என்ன…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘இந்த மாவட்டத்தின் ஹனிபீ நகரத்தை புதிய மாநகராட்சியாக அறிவிக்கலாம் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நகரத்துடன், பிக் பாண்டு நகராட்சியையும் இணைத்து மாநகராட்சியை உருவாக்க கடந்த ஆட்சி காலத்தில் திட்டமிட்டிருந்தது தெரிகிறது. தற்போது புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உள்ளாட்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தர்ம யுத்த நாயகனுக்கு பிக் பாண்டு சொந்த ஊராக இருந்தாலும், பிக் பாண்டு-க்காரர்கள், அனைத்து தேர்தல்களிலும் இவரது தரப்பினருக்கு எதிர் நிலையிலேயே இருப்பதால், பிக் பாண்டு காரர்களை பழிவாங்க, தர்மயுத்த நாயகர் தரப்பு திட்டமிட்டதாம். இதன்படி, பிக்பாண்டு நகராட்சியே இல்லாத அளவிற்கு இதனை ஹனிபீயோடு சேர்த்து விடலாம் என தர்மயுத்த நாயகன் நினைத்து கடந்த ஆட்சியின்போது, காய் நகர்த்தினாராம். அதற்குள் தேர்தல் வந்து அனைத்தும் மாறிவிட்டது. ஆனால், ஹனிபீ நகரை மாநகராட்சியாக்கும் கோரிக்கை இப்போது எழுந்தாலும், 150 ஆண்டு வரலாறு படைத்த பிக் பாண்டு நகராட்சியை, ஹனிபீயோடு சேர்ப்பது குறித்தும், இதன்பேரில் பிக்பாண்டு மக்களின் மனநிலை குறித்தும் ஆய்வு செய்து, கருத்துகள் அறிந்த பிறகே மாநகராட்சி அறிவிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் தற்போதைய ஆளும் தரப்பு உறுதியாக இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘ரெட்ஹில்ஸ் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் அமோகமாக நடப்பதாக புகார்கள் வருதே…’’‘‘ஆமா…  பட்ரவாக்கம் குடிமை பொருள் வழங்கல் தடுப்பு துறையை சேர்ந்த போலீஸ் ஒருவரும் அவரது உறவினரான எஸ்ஐ ஒருவரும் இந்த கடத்தலுக்கு முழு அளவில் உதவியாக இருக்கிறார்களாம். வாரம் இரண்டு முறை இந்த அரிசி கடத்தல் நடக்கிறதாம். அந்த பகுதியில் ரெண்டு மூன்று பேர் ரேஷன் அரிசி வியாபாரத்தை தொழிலாகவே வைத்திருக்கிறார்கள். அதிகாரிகள் பலம் இருப்பதால் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் அமோகமாக நடக்கிறதாம். இதற்காக வாரம் பத்தாயிரம் வரை சம்மந்தப்பட்ட போலீசுக்கு அரிசி வியாபாரிகள் தருகிறார்களாம். சமீபத்தில் இந்த பகுதியில் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை பொதுமக்களே பிடித்துள்ளனர். ஆனால், அந்த ஆளை லாவகமாக தப்பிக்க விட்டுவிட்டார்களாம் அந்த போலீசும்,  எஸ்ஐயும். இது தொடர்பாக முதல்வருக்கும், சம்மந்தப்பட்ட அமைச்சருக்கும் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளதாம். சீக்கிரம் அந்த பார்ட்டிகள் மாட்டுவார்கள் என்று புகார் கொடுத்தவர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘குமரி மாவட்ட காவல்துறையில்  எடுக்கப்படும் அவசர நடவடிக்கைகள் எல்லாம் பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்  என்ற நிலையில் தான் உள்ளதாக சொல்கிறார்களே.. என்ன விஷயமாம்..’’ என ஆர்வத்தோடு கேட்டார் பீட்டர் மாமா.‘‘சமீபத்தில் திருவட்டார் அருகே போதை புகையிலை கடத்தல் கும்பலிடம் இருந்து ரூ.5 லட்சம் ஆட்டய போட்ட சம்பவத்தில், நடந்துள்ள இடமாற்ற விவகாரம் போலீஸ் மத்தியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. குற்ற தடுப்பு தனிப்படையில் இருந்த ஒரு போலீஸ்காரரை ஆயுதப்படைக்கு மாற்றி உள்ளனர். இவருக்கும், இந்த விவகாரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லையாம். தனிப்படைக்கு வாகனம் ஓட்டியதை தவிர, வேற எந்த தப்பு நான் செய்யவில்லை என இவர் மன வேதனையில் உள்ளாராம். பணத்தை எடுத்து கொடுத்த தனிப்படையில் உள்ள ஒரு நபரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எஸ்.பி.க்கு, ரிப்போர்ட் போய் இருக்கிறது. அந்த ரிப்போர்ட்டை விசாரிக்காமலேயே நடவடிக்கை எடுத்துள்ளனர். முதலில் ரூ.5  லட்சம் தான் என நினைத்து உள்ளனர். ஆனால் நீதிமன்றத்துக்கு போன பின்னர் கைதானவர்கள் ரூ.11 லட்சம் என கூறி உள்ளனர். இதை கூட முறையாக விசாரிக்காமல் எஸ்.பி.க்கு ரிப்போர்ட் கொடுக்கும் நிலையில் எஸ்.பி. தனிப்பிரிவு உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாம். காவல்துறை சிறப்பாக செயல்படணும் என  விரும்பும் எஸ்.பி. முதலில் போர்ஜரி வேலை காட்டும் எஸ்.பி. ஏட்டுக்களை  மாற்ற வேண்டும் என்று காவல்துறையில் உள்ளவர்களே உள்ள குமுறல்களை வெளிப்படுத்தி வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கால்நடை இறப்பு, இயற்கை பேரிடர் கால இழப்பீடு தொகை பெற 10 வருடமாக அலைக்கழிக்கப்பட்டார்களாமே..’’‘‘கடலோர மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் கால்நடை இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் என 3 பணியிடங்கள் கடந்த இலை ஆட்சியில் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது. அதேபோல் கால்நடை மருத்துவர் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. 10 வருடத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையும் 1 லட்சத்தை தாண்டி இருந்ததால் அதை பாதுகாக்க  மருத்துவர்கள், கால்நடைகளை  முறையாக கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரிகள் இல்லாமல் இருந்ததால் கால்நடைகளுக்கு தேவையான எந்த திட்டங்களும் உரிமையாளர்களுக்கு வந்து சேரவில்லை. விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கால்நடைகள்  கூட முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யக்கூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வராததால் ஏராளமான கால்நடைகள் தினமும் இழக்க  நேரிட்டது. கால்நடை இறப்பு இழப்பீடு தொகை, இயற்கை பேரிடர் கால இழப்பீடு தொகை வழங்கப்படாமல் கடந்த ஆட்சியில் அலைகழிக்கப்பட்டதாக உரிமையாளர்கள் புலம்புகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா….

The post தர்மயுத்த நாயகனின் திட்டம் தகர்ந்துபோனதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: