தரமற்ற சாலைகள் அமைக்கப்பட்டிருந்தால் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு உறுதி

சேலம்: சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள இரு வழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாகவும், 4 வழிச்சாலைகளை 6 வழிச்சாலைகளாகவும் மாற்றவுள்ளோம். இதற்கான திட்டவரைவுகளை மதிப்பீடுடன் அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். நகர பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியை போக்க புறவழிச்சாலைகளை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் புறவழிச்சாலைகள் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் இரு வழிச்சாலை இருக்கிறது. அந்த இடங்களில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால், அவ்விடங்களில் 4 வழிச்சாலையாக மாற்ற ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்கும்போது எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலம் முழுவதும் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலைகள், பாலங்கள் தரமானதாக இருக்கிறதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் அடங்கிய தரக்கட்டுப்பாட்டு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவினர் 25 இடங்களில் தரக்கட்டுப்பாடு தொடர்பாக ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் ஆய்வறிக்கை வந்த பின்னர் தான், தரமில்லா சாலைகள் அமைத்த அதிகாரிகள், ஒப்பந்ததார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும் இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்….

The post தரமற்ற சாலைகள் அமைக்கப்பட்டிருந்தால் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு உறுதி appeared first on Dinakaran.

Related Stories: