தனியார் பள்ளி வேன் மோதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி

பேராவூரணி , ஜூலை 16: பேராவூரணி அருகே தனியார் பள்ளி வேன்மோதி , பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் இறந்தது தொடர்பாக திருச்சிற்றம்பலத்தில் மறியல் நடைபெற்றது. பேராவூரணி அருகே உள்ள வலச்சேரிக்காடு கிராமத்தை சேர்ந்த அருணாசலம் மகன் யுவராஜ் (18). பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். விடுமுறை நாட்களில் குளத்தில் மீன் பிடித்து விற்பனை செய்து வருவாராம். நேற்று காலை திருச்சிற்றம்பலம் உப்புக்குளத்தில் மீன்பிடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் புக்கரம்பை பகுதிக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றார். அப்போது, பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி வேன் நடுவிக்குறிச்சி அருகே மோதியதில் பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் யுவராஜ் உயிரிழந்தார்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினரிடம் இறந்த மாணவரின் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஈமச்சடங்கிற்காக குறிப்பிட்ட தொகை தருவதாகவும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து இன்ஷ்யூரன்ஸ் தொகை பெற்று தருவதாகவும் பள்ளி நிர்வாகம் உத்தரவாதம் அளித்தது. இதையடுத்து பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் முடிவுற்ற நிலையில், திருச்சிற்றம்பலம் கடைவீதியில் நேற்று மாலை 5 மணியளவில் பள்ளி நிர்வாகம் கூடுதல் தொகை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பட்டுக்கோட்டை-புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னா , பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் , தாசில்தார் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் இரவு வரை மறியல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

The post தனியார் பள்ளி வேன் மோதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: