தஞ்சாவூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை

 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் வெகுவாக அவதியடைந்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை மாவட்டம் முழுவதும் பரவலாக விடிய விடிய மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கியது. தஞ்சாவூரில் பெய்த மழையின் காரணமாக வடக்கு வீதியில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் சுல்தான் என்பவரது பழமையான வீடு இடிந்து சேதமானது.தஞ்சாவூர் – ரெட்டிப்பாளையம் சாலையில் மழை நீர் தேங்கி நின்றது.

மழை நீர் வடிய வழியில்லாததால் சாலை குளம் போல் காட்சியளித்தது. பின்னர் நேற்று பிற்பகலுக்கு பிறகு மழைநீரை பொக்ளீன் இயந்திரம் மூலம் வடிகால் ஏற்படுத்தி வடியவைத்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் சித்திரை பட்டத்தில் உளுந்து, எள் ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்த மழையினால் இளம் பயிராக உள்ள உளுந்து, எள் பயிர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த கனமழையால் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தை சுற்றிலும் மழை நீர் தேங்கியது. இதனால் போலீசார் ஸ்டேஷனுக்குள் செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை appeared first on Dinakaran.

Related Stories: