டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி

திண்டிவனம், ஏப். 20: திண்டிவனம் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார். மூன்று பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி விசாலாட்சி(40), மற்றும் அதே பகுதியை சேர்ந்த மாரி என்பவர் மகன் காளியப்பன்(40), மன்னாதபிள்ளை மனைவி மங்கை(50), வெங்கடேசன் மகன் தாமோதரன் ஆகியோர் நேற்று அதிகாலை பாதிரி கிராமத்தில் இருந்து தங்கள் விவசாய நிலங்களில் விளைந்த விளைபொருட்களை விற்பனை செய்வதற்காக டிராக்டர் மூலம் திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்துச் சென்றனர்.

பின்னர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளைபொருட்களை வைத்துவிட்டு, மீண்டும் பாதிரி கிராமத்திற்கு டிராக்டர் இன்ஜின் மீது அமர்ந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சலவாதி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிராக்டரின் பின்னால் வந்த லாரி மோதியதில், டிராக்டர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் விசாலாட்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த ரோசணை போலீசார், உயிரிழந்த விசாலாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: