இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு பேஸ்புக் போல் டிவிட்டர் பயனாளிகள் தகவலும் விற்பனை

லண்டன்: பேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்கள் பகிரப்பட்டதுபோல், டிவிட்டர் பயன்படுத்துவோர் தகவல்களும் லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது தற்போது அம்பலம் ஆகியுள்ளது.

உலகம் முழுவதும் பேஸ்புக் சமூக இணையதளத்தை 200 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். லண்டனை சேர்ந்த ‘கேம்பிரிட்ஜ் அனாலிடிகா’ என்ற அரசியல் ஆய்வு நிறுவனம், பேஸ்புக் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்களை திருடி, பல்வேறு நாட்டு தேர்தல்களில் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக மக்களின் மனநிலையை மாற்ற பயன்படுத்தியது.

2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்ய ஏஜென்டுகள் சிலர் போலி கணக்குகளை தொடங்கி விளம்பரங்களையும், பொய் தகவல்களையும் பேஸ்புக் மூலம் பரப்பியுள்ளனர். இதற்காக, அமெரிக்காவில் பேஸ்புக் பயன்படுத்துவோர் 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்களை திருடி கொடுத்துள்ளது அனாலிடிகா நிறுவனம். இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற குழுவிசாரணைக்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் ஆஜராகி அளித்த சாட்சியம் வருமாறு: கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் ஊடுருவலை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

பேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்களை பாதுகாக்க தவறிவிட்டோம். ரஷ்ய ஊடுருவல்காரர்கள் மீண்டும் சைபர் தாக்குதல்களை நடத்தலாம் என எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு உலகம் முழுவதும் பல தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அமெரிக்கா, இந்தியா, பிரேசில், மெக்சிகோ, ஹங்கேரி மற்றும் பாகிஸ்தானில் தேர்தல்கள் நியாயமாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் அதற்கான நடவடிக்கைகளை பேஸ்புக் மேற்கொள்ளும். பேஸ்புக்கில் போலி கணக்குகளை கண்டறிய செயற்கை அறிதிறன்(ஏஐ) மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளோம். இனிமேல் பேஸ்புக்கில் தேர்தல் விளம்பரங்களை வெளியிடுவோரிடம் அரசு அடையாள அங்கீகார அட்டை மூலம் அவர்கள் இருப்பிடத்தை சரிபார்ப்போம் என்றார்.

பேஸ்புக் போல், டிவிட்டர் பயன்படுத்துவோர் தகவல்களும் அனாலிடிகா நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து ‘தி சண்டே டெலிகிராப் பத்திரிகையில் கூறியிருப்பதாவது: கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன மென்பொருள்களை உருவாக்கிய அலெக்சாண்டர் கோகன், குளோபல் சயின்ஸ் ரிசர்ச்(ஜிஎஸ்ஆர்) என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் டிவிட்டர் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. டிவீட் தகவல்கள், பயன்படுத்துவோர் பெயர், அவர்களின் போட்டோ, இருப்பிட விவரம் போன்றவை டிவிட்டரிடம் இருந்து கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் முதல் 2015ம் ஆண்டு ஏப்ரல் வரை பெறப்பட்டுள்ளது.

மொத்தமாக தகவல்கள் பெறும் நிறுவனங்களிடம் டிவிட்டர் நிறுவனம் கட்டணம் வசூலித்துள்ளது.

அலெக்சாண்டர் கோகன் உருவாக்கிய பெர்சனாலிட்டி-குவிஸ் ஆப்பை 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். இதன் மூலம் அவர்களின் மற்றும் நண்பர்களின் தகவல்கள் முறைகேடாக அனாலிடிகா நிறுவனத்துடன் பகிரப்பட்டது.

இதுகுறித்து டிவிட்டர் நிறுவனம் கூறுகையில், ‘‘பிராண்ட் அறிக்கை தயார் செய்யவும், கணக்கெடுப்பு பணிக்காவும் டிவிட்டர் தகவல்கள் ஒரே ஒரு முறைதான் பயன்படுத்தப்பட்டது. டிவிட்டர் கொள்கை விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை’’ என கூறியுள்ளது.

Related Stories: