சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க கோரிக்கை நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி வேண்டும்: தலைமை நீதிபதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை கடைபிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வலியுறுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வழக்கறிஞர்களின் சேமநல நிதியை ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டுவிழா மற்றும் புதிய நீதிமன்ற கட்டிடங்கள் திறப்பு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நம்முடைய உச்ச நீதிமன்றத்தினுடைய தலைமை நீதிபதி பொறுப்பேற்று ஓர் ஆண்டு இன்றோடு நிறைவு பெறக்கூடிய வகையில், உங்களோடு சேர்ந்து நானும் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவருக்கு இன்று ஓர் ஆண்டு முடிவடைகிறது. எனக்கு அடுத்த மாதம் 7ம் தேதி ஓர் ஆண்டு முடிவடைய இருக்கிறது.தமிழ்நாட்டில் எனது தலைமையில் அரசு பொறுப்பேற்ற பிறகு, உயர் நீதிமன்றத்தில் நான் பங்குபெறக்கூடிய முதல் விழா இந்த விழா. அப்படிப்பட்ட இந்த சிறப்பான  நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மிகுந்த பெருமைப்படுகிறேன். சட்டத்தின் ஆட்சியை, சமூகநீதியின் ஆட்சியை, நீதிநெறிமுறைகளையும், விதிமுறைகளையும் முறையாக பின்பற்றும் ஆட்சியை வழங்க வேண்டும் என்ற உறுதியோடு, தமிழ்நாட்டில் நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறோம். அத்தகைய வழிமுறையே எந்நாளும் எங்களை வழிநடத்தும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தமிழ்நாட்டிற்கு வந்திருப்பது, உள்ளபடியே பெருமைக்குரிய வகையில் அமைந்திருக்கிறது. அதுவும் அவரோடு நானும் இந்த விழாவில் பங்கேற்பதில் பெருமையாகக் கருதுகிறேன்.சட்டத்தின் குரலாக மட்டுமல்ல, மக்களின் குரலாகவும் பலநேரங்களில் ஒலிக்கக் கூடியவராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆந்திர மாநிலத்தில் பொன்னாவரம் என்ற கிராமத்தில் ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து இன்றைய நாள் இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் உயர்ந்து நிற்கக் காரணம், இந்திய மக்களின் மனசாட்சியின் குரலாக அவர் இருக்கின்ற காரணம்தான். அதுதான் அவரது தீர்ப்புகளிலும், தலைமை நீதிபதி என்ற முறையில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர் ஆற்றக்கூடிய உரைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்ட நீதிபதியான இவர், தற்போது நாட்டு மக்கள் அனைவரின் நம்பிக்கையைப் பெற்றவராக திகழ்கிறார்.நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம் ஆகிய மூன்றும் மக்கள் மன்றத்தின் விருப்பங்களை, உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடிய மன்றங்களாக செயல்பட வேண்டும்.  தலைமை நீதிபதியும் அப்படித்தான் செயல்பட்டு வருகிறார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை என்னால் எடுத்துக் கூற முடியும். ‘அனைத்து சட்டங்களும் நீதிமுறை சார்ந்த லட்சியங்களால் உறுதிசெய்யப்பட வேண்டும்’ என்பதில் உறுதியாக இருக்கும்  தலைமை நீதிபதி இந்த விழாவுக்கு வந்திருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. நமது தலைமை நீதிபதி தலைமையில் சிறப்பான நீதிபரிபாலனை நடந்துகொண்டிருக்கிறது. அரசியலமைப்பின் பாதுகாவலன் என்ற முறையில் இந்திய நீதிமுறையை சிறப்பான வகையில் மக்களிடையே செயல்படுத்தி வருகிறார்.சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் நீதித்துறைக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று, அங்கு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கக்கூடியவர்களாக நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். நாகரிக சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், மறுமலர்ச்சிக்கும், மக்களின் பாதுகாப்பிற்கும், அவர்களது உரிமை பாதுகாக்கப்பட்டு செழித்தோங்குவதற்கும், சுதந்திரமாக செயல்படும் நீதித்துறை தேவை என்பதை நமது அரசியலமைப்பு உறுதி செய்கிறது. அதன்படி தமிழ்நாடு அரசும் செயல்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் விரைவில் நீதி கிடைப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் முன்னுரிமை அடிப்படையில் இந்த அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள சார்பு நீதிமன்றங்களையும் நீதிபதிகளின் எண்னிக்கையையும் அதிகரித்து பெருகி வரும் வழக்குகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர், சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 3 வணிகவியல் நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிபதி நிலையில் அமைப்பதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்ல, 3 வணிகவியல் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிபதி நிலையில் அமைப்பதற்கும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் புதிதாக சார்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.நீதித்துறையின் நீடித்த சிறப்பான செயலாக்கத்திற்கு இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் கீழமை நீதிமன்றங்களை படிப்படியாக சொந்த கட்டிடங்களுக்கு மாற்றுவதற்கும் அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. காரைக்குடியில் ஒரு சட்டக்கல்லூரி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி பல்வேறு முன்னெடுப்புகளை நீதித்துறைக்கு தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. நீதித்துறையின் உயிரோட்டமாக விளங்கும் வழக்கறிஞர்களின் நலன் காப்பதிலும் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.  இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, வழக்கறிஞர்களின் கோரிக்கையான தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி மூலம் வழங்கப்படும் சேம நல நிதியானது ரூபாய் 7 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த சுமார் 450 வழக்கறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட 20 கோடி ரூபாய் தொகையை மாநில அரசு விரைவில் வழங்கும். இந்த நேரத்தில் இன்னொரு நல்ல செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். சட்டமேதை பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான கடந்த 14ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் இயங்கிவரும் பல்வேறு நீதிமன்றங்களை ஒரு புதிய 9 மாடி கட்டிடத்தில் அமைக்கக்கூடிய வகையில் 20 கோடியே 24 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக சென்னையின் முக்கிய பகுதியில் நீதித்துறையின் உட்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நீதிமன்றங்களை அமைக்கும் வண்ணம் கடந்த 20ம் தேதி 4.24 ஏக்கர் நிலம் நீதித்துறைக்கு இந்த அரசு வழங்கி உத்திரவிட்டுள்ளது. அந்த கட்டிடம் அமைந்தால் நீதித்துறை உட்கட்டமைப்புக்கு அடுத்த 100 ஆண்டுகளுக்கான தேவை பூர்த்தி ஆகும் என்பதில் ஐயம் இல்லை. இந்த தருணத்தில், நீதித் துறையே முழுமையாக இங்கு வந்து வீற்றிருக்கும் இந்த மேடையில் மாநிலத்தின் சார்பாக சில கோரிக்கைகளை வைக்க விரும்புகின்றேன். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கடைபிடிக்கப்பட வேண்டும். இந்த நடைமுறை உயர் நீதிமன்ற பணியிடங்களில் உறுதி செய்யப்பட வேண்டும்.இரண்டாவதாக தென்மாநிலங்களில் உள்ள மக்கள் உச்ச நீதியை தேடி டெல்லி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, தென் மண்டல மக்களின் நீண்ட கால கோரிக்கையான உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் ஆகிய உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகள் வழக்காடு மொழியாக உள்ளது. எனவே, தமிழக மக்களின் சார்பிலும், தமிழக வழக்கறிஞர்கள் சார்பிலும் இந்த கோரிக்கையை வைக்கிறேன்.  சட்டத்தின் ஆட்சியாக, சமூகநீதி ஆட்சியாக, நீதிநெறிமுறை கொண்ட ஆட்சியாக தமிழ்நாட்டில் ஆட்சி செயல்பட்டு வருகிறது. இத்தகைய ஆட்சியில், நீதித்துறையினரின் கோரிக்கைகள் உடனுக்குடன் எந்தவித தாமதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதற்கு ஒரே காரணம், மக்களுக்கான நீதியே மகத்தானது என்பதோடு, கடைக்கோடி குடிமகனுக்கும் நீதி தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்ற அடித்தளத்தில் செயல்பட்டு வருபவர்கள் நாங்கள். இத்தகைய நெறிமுறைகளே எங்களை வழிநடத்துகிறது. இவ்வாறு பேசினார்.* நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம் ஆகிய மூன்றும் மக்கள் மன்றத்தின் விருப்பங்களை, உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடிய மன்றங்களாக செயல்பட வேண்டும். * நாகரிக சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், மறுமலர்ச்சிக்கும், மக்களின் பாதுகாப்பிற்கும், அவர்களது உரிமை பாதுகாக்கப்பட்டு செழித்தோங்கவும், சுதந்திரமாக செயல்படும் நீதித்துறை தேவை என்பதை நமது அரசியலமைப்பு உறுதி செய்கிறது….

The post சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க கோரிக்கை நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி வேண்டும்: தலைமை நீதிபதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: