பழநி முருகன் கோயில் அலுவலகத்தில் தீவிபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்ததா?

பழநி: பழநி கோயில் தலைமை அலுவலகத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் எரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில்  நிர்வாக தலைமை அலுவலகம் தெற்கு கிரி வீதியில் உள்ளது.  நேற்று பிற்பகல்  முதல்தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் திடீரென கரும்புகை வெளியேறியது. பீதியடைந்த அலுவலக பணியாளர்கள் அலறியடித்து வெளியேறினர். பழநி  தீயணைப்புப்படை வீரர்கள் வந்து, சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் எரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.  கோயில் தலைமை அலுவலகத்தில் நடந்த தீ விபத்து பீதியை ஏற்படுத்தி உள்ளது. பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில்,  ‘‘கூட்ட அரங்கில் முக்கிய ஆவணங்கள் எதுவும் வைக்கவில்லை. பழைய ரசீதுகள் மட்டுமே இருந்தன. 2 ஏசி இயந்திரங்கள் மட்டுமே  சேதமடைந்துள்ளன” என்றார்.

சிலை கடத்தல் வழக்கை திசை திருப்ப முயற்சியா?

பழநி கோயில் உற்சவர் சிலை முறைகேடு தொடர்பாக ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். அறநிலைத்துறை ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இதற்கிடையே விசாரணை டிஎஸ்பி கருணாகரன் திடீரென மாற்றப்பட்டார். ஐ.ஜி பொன்மாணிக்கவேலும் மாற்றப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.  விசாரணைக்கு அரசு தரப்பில் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லையென அவர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். இந்நிலையில் கோயில்  அலுவலகத்தில் தீ விபத்து நிகழ்ந்திருப்பது சிலை கடத்தல் வழக்கை திசை திருப்ப முயற்சியா என பக்தர்கள் மத்தியில் சந்தேகங்களை எழுப்பி  உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: