சிதம்பரம் நடராஜர் கோயில் 2வது நாளாக நகை சரிபார்க்கும் பணிகள் தொடங்கியது

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள் மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் 2வது நாளாக தொடங்கியது. உலக பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகை ஆய்வுப்பணி என்பது நடந்து வருகிறது. நேற்று கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 3 துணை ஆணையர்கள் மற்றும் 3 நகை மதிப்பீட்டு வல்லுநர் குழுவினர் ஆய்வு நடத்தினர். நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய ஆய்வு மாலை 6 வரை நடைபெற்றது. சுமார் 17 ஆண்டுகளுக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள் சரிபார்க்கும் பணிகள் நேற்று தொடங்கிய நிலையில், இன்று 2ம் நாளாக ஆய்வுப்பணிகள் தொடங்கியது. நேற்று வந்த அதிகாரிகளே இன்றும் சோதனை மேற்கொள்ள உள்ளனர். கடலூர் மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று 2 நாளாக ஆய்வுகளை தொடங்கியுள்ளனர். நேற்று ஓராண்டிற்கான கணக்கை பார்த்த நிலையில், இன்று அதற்கு அடுத்த ஆண்டிற்கான கணக்குகள் பார்க்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2005ம் ஆண்டில் தான் நகை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது. அதன் பிறகு எவ்வித ஆய்வுப்பணிகளும் கோயிலில் மேற்கொள்ளப்படவில்லை. இதனிடையே இடைப்பட்ட 17 ஆண்டுகளில் கோயிலுக்கு வந்த நகைகள் உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யப்பட உள்ளதால், குறைந்தது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை நடைபெறும் ஆய்வு பணிகள், மீண்டும் நாளை 3ம் நாளாக தொடங்கப்படும். இதேபோல் குறைந்தது 10 நாட்கள் ஆய்வு பணிகள் நடைபெறும். நடராஜர் கோயிலை பொறுத்தவரை இந்துசமய அறநிலையத்துறையின், சாதாரண மற்ற ஆய்வுகளுக்கு தான் தீட்சிதர்களின் அனுமதி மறுப்பு என நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டியிருந்தனர். ஆனால் நகைகள் ஆய்வு என்பது 1955ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருவதால் நகை சரிபார்ப்பு ஆய்வுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தருகின்றனர். இதுவரை 10 முறை நகைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது நடைபெறுவது 11வது முறை ஆய்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.           …

The post சிதம்பரம் நடராஜர் கோயில் 2வது நாளாக நகை சரிபார்க்கும் பணிகள் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: