ராஜபாளையம் அருகே பரிதாபம் கார் - லாரி நேருக்கு நேர் மோதல் கர்நாடகாவை சேர்ந்த 7 பேர் பலி: மேலும் இருவர் கவலைக்கிடம்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில், கர்நாடகாவை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர்  கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள வித்திய கண்ணாபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (45). கர்நாடக மாநில அரசு போக்குவரத்துக்கழக  பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர், மனைவி முனிரத்னா(35) மற்றும் உடன் பணியாற்றும் ஊழியர்கள் குடும்பம் உட்பட 9 பேருடன்  கடந்த 2ம் தேதி காரில் சுற்றுலா சென்றார். நேற்று முன்தினம் கேரளா சென்று பின்னர் அன்று இரவு ஊருக்கு புறப்பட்டனர். காரை மகேஷ் ஓட்டி  வந்தார்.

நேற்று அதிகாலை 2.30 மணியளவில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், தேவதானம் அரசு விதை பண்ணை அருகே வந்தபோது சேலத்தில் இருந்து  சர்க்கரை மூடைகளுடன் தென்காசிக்கு வந்த லாரி, கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்புறம் சுக்குநூறாக நொறுங்கியது.காரை ஓட்டி வந்த மகேஷ், அவரது மனைவி முனிரத்னா, அரசு போக்குவரத்து கழக மெக்கானிக் சந்தனகவுடா(34), கிளார்க் தாரா அம்மாள்(32), டிரைவர்  லட்சுமிநாராயணன் மனைவி கலாவதி(30), இவரது மகள் தீப்சிதா(12) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.

தகவலறிந்த போலீசார் மற்றும் ராஜபாளையம் தீயணைப்பு வீரர்கள் காரின் உள்ளே உயிருக்கு போராடிய  சந்தனகவுடா மனைவி சாந்தா(30), மகன்  பிரவீண்(11), டிரைவர் லட்சுமி நாராயணன்(44) ஆகிய 3 பேரை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீண்  உயிரிழந்தான். சாந்தா மற்றும் லட்சுமிநாராயணனை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களது நிலை கவலைக்கிடமாக  உள்ளது.

Related Stories: