சாத்தான்குளம், செப். 8: சாத்தான்குளம் அருகே கிடப்பில் போடப்பட்ட மேட்டுக்குடியிருப்பு- கொம்பன்குளம் சாலைப் பணி தினகரன் செய்தி எதிரொலியாக மீண்டும் துவங்கியது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள கிராம மக்கள் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியம் கொம்பன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்குடியிருப்பில் இருந்து கொம்பன்குளம் செல்லும் 2 கி.மீ. தொலைவிலான சாலை பராமரிப்பின்றி தூர்ந்துப்போனது. இதனால் அவதிப்பட்ட கிராம மக்கள் உருக்குலைந்த இச்சாலைக்குப் பதிலாக புதிய சாலை அமைத்துத்தருமாறு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் புதிய சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டதோடு இதற்காக கடந்த ஜூலை மாத இறுதியில் கற்கள் விரித்துவைக்கப்பட்டபோதும் சாலைப் பணி துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதனால் வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்த கோரிக்கை செய்தி தினகரனில் நேற்று முன்தினம் (6ம் தேதி) படத்துடன் வெளியானது. இதையடுத்து இதுகுறித்து ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் ஆய்வுநடத்திய ஊராட்சி நிர்வாகத்தினரும், ஒன்றிய நிர்வாகத்தினரும் கிடப்பில் கிடந்த சாலை அமைப்பு பணியை மீண்டும் துவங்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து சாலை பணி தீவிரமாக நடந்துவருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ள கிராம மக்கள் இதை வரவேற்று நன்றி தெரிவித்தனர். மேலும் கொம்பன்குளம் வில்லேஜ் எனும் வாட்ஸ் அப் குரூப் வாயிலாக தெரிவித்த நன்றி வைரலானது.
The post சாத்தான்குளம் அருகே கிடப்பில் போடப்பட்ட மேட்டுக்குடியிருப்பு-கொம்பன்குளம் சாலை பணி மீண்டும் துவங்கியது appeared first on Dinakaran.