சிவகங்கை: சிவகங்கை அருகே சட்டக் கல்லூரி மாணவர் கார் மோதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை தாகூர் தெருவை சேர்ந்த முத்துமாரி மகன் சரத்குமார்(26). சட்டக்கல்லூரி மாணவரான இவரது சொந்த ஊர் சிவகங்கை அருகே பி.வேலாங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 12ம் தேதி சரத்குமாரின் உறவினர் ஒருவர் இறந்த நிகழ்ச்சிக்கு சென்றபோது இவரது அண்ணன் ஐயப்பனுக்கும், உறவினர் சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தனர். சிகிச்சை பெறுபவர்களை பார்ப்பதற்காக கடந்த 13ம் தேதி சரத்குமார் மருத்துவமனை வந்தார். அப்போது அங்கிருந்த எதிர் தரப்பினர் சரத்குமாரை தாக்குவதற்காக விரட்டினர். அவர்களிடம் இருந்து தப்பி சிவகங்கை, வல்லனி சாலையில் டூவீலரில் சரத்குமார் சென்றபோது காரில் விரட்டிச் சென்ற அந்த கும்பல் வல்லனி பஸ் நிறுத்தம் அருகே அவர் மீது மோதியது. இதில் சரத்குமார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இது குறித்து சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க சிவகங்கை டிஎஸ்பி சிபிசாய்சௌந்தர்யன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
The post சட்டக்கல்லூரி மாணவரை கார் மோதி கொன்ற வழக்கில் 5 பேர் கைது appeared first on Dinakaran.