×

கோவையில் ஒணம் பண்டிகையொட்டி பூக்கள் விலை உயர்வு

 

கோவை, ஆக. 28: கேரளா மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால், ஓணம் பண்டிகையையொட்டி கோவைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையின்போது மலையாளிகள் வீட்டின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு வழிபாடு செய்வார்கள். இதற்காக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் கேரளாவிற்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் வீட்டின் முன்பு அத்தப்பூ கோலமிட உள்ளனர்.

இதற்காக, அவர்கள் நேற்று பூ மார்க்கெட்டில் குவிந்து பூக்களை வாங்கினர். நடப்பாண்டில், போதிய அளவில் மழை இல்லை. இதனால், பூக்களின் விளைச்சல் குறைந்து உள்ளது. எனவே, கோவைக்கு மலர் வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்து உள்ளது. அதன்படி, ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோல ஜாதி மல்லி ரூ.400-க்கு விற்பனையானது. இருப்பினும், ஓணம் பண்டிகை என்பதால் பொதுமக்கள் பூக்கள் விலை உயர்வு பற்றி கவலைப்படாமல் பூக்களை கிலோ கணக்கில் வாங்கி சென்றனர்.

இதனால், பூ மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. பூக்கள் விற்பனையும் களைக்கட்டியது. மேலும், நேற்று பூ மார்க்கெட்டில், ஒரு கிலோ செவ்வந்தி ரூ.160, செண்டு மல்லி ரூ.50, சம்பங்கி ரூ.120, அரளி ரூ.120, ஒரு கட்டு மருகு ரூ.10, வாடாமல்லி ரூ.80, ரோஜா ரூ.240, மரிக்கொழுந்து ரூ.30, துளசி ரூ.40, கலர் செவ்வந்தி ரூ.240, வெள்ளை செவ்வந்தி ரூ.200, மஞ்சள் செவ்வந்தி ரூ.100, ஜாதிப்பூ ரூ.400, கோழிக்கொண்டை ரூ.100, ஒரு தாமரைப்பூ ரூ.20, முல்லை ரூ.400 என விற்பனையானது. ஓணம் பண்டிகை முடிந்த பிறகு பூக்களின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post கோவையில் ஒணம் பண்டிகையொட்டி பூக்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Onam ,Kerala ,Onam festival ,
× RELATED கேரளா மாநிலம் வயநாடு பகுதிக்கு...