×

தொண்டாமுத்தூரில் காட்டு யானைகள் அட்டகாசம்: காட்டு யானை-மனித மோதலை தடுக்க வேண்டும்

 

கோவை. ஜூலை 30: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த விராலியூரில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில், யானை-மனித மோதலை தடுக்க வலியுறுத்தி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் நேற்று மனு அளித்தனர்.

பின்னர், இதுபற்றி எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது: தொண்டாமுத்தூர் விராலியூரில் நேற்று காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பூசாரி உள்பட 5 பேர் காயம் அடைந்துள்ளனர். ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள் ஊடுருவலை சரியாக கண்காணித்தால், இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாது. தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராம மக்கள், பாதுகாப்பு இல்லாத நிலையில் இருக்கிறார்கள். யானை உள்ளிட்ட வனவிலங்கு மோதலை, இவர்கள் அடிக்கடி எதிர்கொள்கிறார்கள்.

இந்த விஷயத்தில், வனத்துறையினர் மெத்தன போக்கை தவிர்க்க வேண்டும். வனத்துறையினர் சிலர், யானைகளை விரட்டுவதற்கு, பட்டாசு வாங்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் பணம் கேட்கிறார்கள். இது கூடாது. யானை-மனித மோதலை தடுக்க, மாவட்ட கலெக்டர், வனத்துறையினருடன் கலந்துரையாடல் நடத்த வேண்டும். உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் கிராம மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மீண்டும் மீண்டும் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை, மயக்க ஊசி போட்டு பிடித்து, வேறு வனப்பகுதியில் விட வேண்டும். இவ்வாறு எஸ்.பி. வேலுமணி கூறினார்.

The post தொண்டாமுத்தூரில் காட்டு யானைகள் அட்டகாசம்: காட்டு யானை-மனித மோதலை தடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : THONDAMUTHUR ,Viraliur ,Thondamuthur, Goa district ,minister ,S. B. Major ,Velumani ,
× RELATED பொது உறுப்பினர்கள் கூட்டம்...