கோபி அருகே கழிவுநீரால் கால்நடைகளுக்கு ஆபத்து எரிசாராய ஆலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு

கோபி :  கோபி அருகே உள்ள சின்னபுலியூரில் கடந்த 40 ஆண்டுகளாக தனியார்  எரிசாராய தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து நாள்தோறும் பல ஆயிரம் லிட்டர் எரிசாராயம் உற்பத்தி செய்யபடுகிறது. இந்த எரிசாராயம் விற்பனைக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறது.   இந்நிலையில் இந்த ஆலையில் இருந்து தினமும் பல லட்சம் லிட்டர் கழிவு நீர் முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆலையை சுற்றிலும் உள்ள 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் புகையில் சாம்பல் அதிகளவில் வெளியேறுவதால் நோய் தொற்றுகளுக்கு ஆளாகி வருவதாக கிராம மக்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தனர். புகாரின் பேரில் நேற்று கோபி கோட்டாட்சியர் திவ்ய பிரியதர்சினி தலைமையில், பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலையில் ஆய்வு செய்தனர். அப்போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் உதயகுமார் தலைமையில் உதவி பொறியாளர்கள் முத்துராஜ், உதயன் உள்ளிட்ட  மாசுகட்டுப்பாட்டு வாரிய  அதிகாரிகளும் உடன் இருந்தனர்.இந்த தகவல் பரவியதால் சுற்றுவட்டார விவசாயிகள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. ஆய்வை முடித்து விட்டு, ஆலையில் இருந்து வெளியே வந்த அதிகாரிகளிடம்,  கழிவு நீர் கலந்த குடிநீரை விவசாயிகள் காண்பித்து ஆவேசமாக முறையிட்டனர். மேலும் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பல் குவித்து வைக்கப்பட்டு உள்ளதற்கான ஆதாரங்களை அளித்தனர்.  விவசாயிகள் கோரிக்கையை கேட்ட கோட்டாட்சியர் திவ்ய பிரியதர்சினி, ஆலையில் உள்ள தண்ணீர், கழிவு நீர் மாதிரிகளை சேகரித்து உள்ளதாகவும், அவற்றை ஆய்வகத்திற்கு அனுப்பி அதன் அறிக்கையை வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், பவானி ஆற்றில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் ஆலை அமைக்கப்பட்டு உள்ளதால் கழிவு நீர் ஆற்றில் கலப்பதாகவும், கழிவு நீர் கலந்த தண்ணீரை கால்நடைகள் குடிக்கும் போது கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்து விடுவதாகவும் குற்றச்சாட்டு கூறினர்.  மேலும் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசுபடும் வகையில் இயங்கி வரும் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். …

The post கோபி அருகே கழிவுநீரால் கால்நடைகளுக்கு ஆபத்து எரிசாராய ஆலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: