கொள்ளிடம் பகுதியில் நெற்பயிரில் இலை சுருட்டு புழு தாக்குதல்

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே பனங்காட்டங்குடி கிராமத்தில் சம்பா நெற்பயிரில் இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் மருந்து தெளிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்திருந்த வயல்களில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்ணீர் சூழ்ந்து தொடர்ந்து பத்து நாட்களாக தண்ணீருக்குள்ளேயே நெற்பயிர் மூழ்கி இருந்ததால் சுமார் 13,000 ஏக்கர் நெற்பயிர் சேதம் ஆனது. அதே நேரத்தில் சில மேடான பகுதியில் சம்பா நேரடி விதைப்பு மற்றும் சம்பா நடவு செய்த நெற்பயிர்கள் ஓரளவுக்கு பசுமையாக வளர்ந்து வந்தன. ஆனால் கடந்த சில தினங்களாக கொள்ளிடம் அருகே உள்ள வடரங்கம், பனங்காட்டங்குடி, குன்னம் உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் உள்ள நெற்பயிர்களை இலை சுருட்டுப்புழு தாக்க ஆரம்பித்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். ஒருபுறத்தில் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமாயின. மறுபுறத்தில் மேடான பகுதியில் உள்ள நெற்பயிரை பூச்சிகள் தாக்கும் நிலைக்கு உள்ளாகி உள்ளன. தற்போது நெற்பயிரில் இலை சுருட்டு புழுக்கள் தாக்கி வருவது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், வயலில் அதிகப்படியான தண்ணீர் தொடர்ந்து தேக்கி வைத்தல், குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை மற்றும் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படுகின்ற சூழ்நிலையின் காரணமாக இலைச்சுருட்டுப்புழு நோய் தாக்குதல் ஏற்படுகிறது. இதனால் நெற்பயிரில் தொடர்ந்து தண்ணீர் தேங்காமல் இருக்கவும், தேங்கிய நீரை உடனடியாக வடிகட்டவும், அதனையும் மீறி பூச்சி தாக்குதல் தென்பட்டால் உரிய மருந்தினை காலை நேரத்தில் தெளித்து இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்றனர்.பனங்காட்டங்குடி கிராமத்தில் சம்பா நெற்பயிரில் இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த நெற்பயிரில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்….

The post கொள்ளிடம் பகுதியில் நெற்பயிரில் இலை சுருட்டு புழு தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: