கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மண்டல, பகுதி, வார்டு அளவில் ஒருங்கிணைப்பு குழுக்கள் நியமனம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை நுண் அளவில் கண்காணித்து செயல்படுத்த மண்டல அளவில் மண்டல அலுவலர் தலைமையில் செயற்பொறியாளர், மண்டல நல அலுவலர், உதவி வருவாய் அலுவலர், பூச்சியியல் வல்லுநர், கால்நடை மருத்துவ அலுவலர், குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் மற்றும் காவல் துறை உதவி ஆணையர் ஆகியோர் கொண்ட  ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.   இந்த குழுக்கள் நாள்தோறும் தங்கள் பகுதிகளில் களப் பணியாளர்கள் மூலம் வீடுகள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும்  கொரோனா தொற்று அறிகுறி கணக்கெடுப்பு, காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், கொரோனா தொற்று பரிசோதனைகள், தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிதல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல், தேவையான இடங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், மூத்த குடிமக்கள் மற்றும் இணைநோய் பாதித்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்தல் போன்ற பணிகளை கண்காணித்து செயல்படுத்துவார்கள். வீடுகள்தோறும் சென்று கொரோனா தொற்று அறிகுறி உள்ளதா என கண்டறிய 12,000 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.  ஒவ்வொரு களப்பணியாளரும்  நாள்தோறும் 100 முதல் 150 வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த களப்பணியாளர்கள் கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்களை அருகில் உள்ள காய்ச்சல் முகாமிற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்த வேண்டும், தனிமை படுத்தப்பட்ட வீடுகளில் அதற்கான வில்லைகள் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் இணைநோய் உள்ள நபர்கள் குறித்து தகவல்களை கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க தன்னார்வலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அருகில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது நகர்புற சமூகநல மையம் அல்லது மினி  கிளினிக் ஆகியவற்றை அணுக அறிவுறுத்த வேண்டும். தற்பொழுது, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு வார்டுகளுக்கு ஒரு காய்ச்சல் முகாம் என நாளொன்றுக்கு 100 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  அடுத்த ஒரு வார காலத்திற்குள் ஒரு வார்டிற்கு 2 காய்ச்சல் முகாம் என நாள்தோறும் 400 காய்ச்சல் முகாம்கள் நடத்த ஒருங்கிணைப்பு குழுக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அதிக அளவில் ஆர்டிபிசிஆர் முறையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொற்று பாதித்த நபரை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.  தற்பொழுது சென்னை மாநகரில் நாளொன்றிற்கு 16,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதனை நாளொன்றிற்கு 25,000 பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களை வார்டு அளவில் உள்ள சுகாதார ஆய்வாளர் கண்டறிந்து அவர்களுக்கு தொற்று  பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், தொற்று பாதித்த நபர்களின் இல்லங்கள் அல்லது அலுவலகங்கள் போன்ற பகுதிகளில் கிருமி நாசினி  கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதித்த நபர்களுக்கு முதல்நிலை உடற்பரிசோதனை செய்வதற்காக  12 மையங்கள் உள்ளன. மேலும், கொரோனா பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் 11,775 படுக்கைகள் கொண்ட 13  கொரோனா பாதுகாப்பு மையங்கள் உள்ளன. கொரோனா தொற்று பாதித்த நபர்களின் எண்ணிக்கை மூன்று நபர்களுக்கு மேல் உள்ள தெருக்களில் பழுப்பு நிற வில்லைகளும், கொரோனா தொற்று பாதித்த பகுதி என்பதை குறிக்கும் வகையில் சிறிய  பதாகைகள்  அமைக்கப்பட வேண்டும்.  6 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு உள்ள தெருக்களில் எஸ் வகை தடுப்புகள் அமைக்க வேண்டும்.  10 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று பாதித்த தெருக்களில் ஒரு காவலர் உதவியுடன் தடுப்புகள் அமைக்கப்பட்டு அந்த தெருக்களில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்திய அரசால் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.  கொரோனா தொற்று தடுப்பூசி தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் நாளொன்றுக்கு 30,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை நாளொன்றிற்கு 60,000 நபர்களுக்கு செலுத்தும் வகையில், அந்தந்த பகுதியை சார்ந்த ஒருங்கிணைப்பு குழுக்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுநாள்வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10,23,890 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.  தவறும் நபர்களுக்கு மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிமுறைகளின்படி அபராதம் விதிக்க வேண்டும்.   அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத  தனி நபர்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது அபராதமோ அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எனவே, மண்டல, பகுதி மற்றும் வார்டு அளவில் நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழுக்கள் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும்  தவறாமல் பின்பற்றி பொதுமக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கவேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 3.71 கோடி அபராதம் வசூல் சென்னை மாநகராட்சி பகுதிகளில் இதுநாள் வரை கொரோனா பாதுகாப்பு தொடர்பான அரசின் வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து 3,71,29,795 அபராததொகை வசூலிக்கப்பட்டுள்ளது….

The post கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மண்டல, பகுதி, வார்டு அளவில் ஒருங்கிணைப்பு குழுக்கள் நியமனம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: