கருப்பு பணம் வைத்திருப்பவர் பொருளாளர் ஊழலுக்கு துணைபோகும் கமல்

* நடிகர் கமல்ஹாசன் நீதி, நேர்மை, நியாயம் என கூறி வரும் நிலையில், அவரது கட்சியை சேர்ந்த இருவர் வரி ஏய்ப்பு செய்து மாட்டி இருக்கிறார்களே?

மக்கள் நீதி மய்யம் ஊருக்கு உபதேசம் செய்கிறார்களே தவிர, அவர்களுடைய கட்சியை சேர்ந்த பொருளாளர் வீட்டில் ரூ.12 கோடி பணம் எடுத்திருக்கிறார்கள். அதேபோன்று மகேந்திரன் போன்றவர்கள் ரூ.200 கோடி, ரூ.300 கோடி சொத்துக்கு அதிபதிகள். ஊழலை ஒழிப்பதாக கூறி வருகிறார். ஆனால் கருப்பு பணம் வைத்திருப்பவரை பொருளாளராக வைத்திருக்கிறார். எந்த காலத்திலும் கமல்ஹாசன் ஊழலை ஒழிக்கும் முயற்சியில் வெற்றி பெறவே முடியாது. ஊழலுக்கு துணை போகிற கட்சியாக மநீம இருக்கிறது. அதற்கு சாட்சி சந்திரசேகர் என்ற அவரது பொருளாளர். திருச்சியில் மாட்டியிருப்பவர் கமலின் நெருங்கிய நண்பர்.

* இவர்கள் இருவரும் அதிமுக அமைச்சர்களின் பினாமிகளாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

 இருவருமே, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில அமைச்சர்களுக்கு பினாமியாக இருக்கிறார்கள். கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள ஆர்டர்களை வாங்கி பெரும் பணம் குவித்துள்ளனர். அமைச்சர்களுக்கு லஞ்சமும் கொடுத்திருக்கிறார்கள். இதுமாதிரி ஒரு பக்கம் அதிமுகவின் பினாமியாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் பாஜவுடனும் தொடர்பு வைத்துள்ளனர். இப்படி தான் மநீம செயல்படுகிறது. கமல்ஹாசனின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமே கிடையாது. சினிமாவில் தான் வேஷம் போடுகிறார் என்றால் அரசியலிலும் வேஷம் போடுகிறார். இந்த தேர்தலில் அவரது முகத்திரை கிழித்தெறியப்படும்.

* அப்படி என்றால் அதிமுக உடன் மநீமவுக்கு தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

 வெளிப்படையாக பேசுவதை பார்த்தால் திராவிட இயக்க எதிர்பாளராக காட்டிக் கொள்கிறார். ஆனால் உண்மையிலே அவர் திமுகவை தான் எதிர்க்கிறார். அதிமுகவை எதிர்க்கவில்லை. அதிமுக எதிர்ப்பில் அவர் தீவிரம் காட்டுவதில்லை. அதன் மூலம் பாஜகவின் ‘பி’ டீமாக செயல்படுகிறார். திமுக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக தான் கடுமையாக உழைக்கிறார். அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜவுக்கு மறைமுகமாக உதவுகிறார்கள். இவர்களுக்கு எந்த கொள்கையும் கிடையாது. அவரது கட்சி நெடுஞ்சாலையில் தான் போய்க் கொண்டிருக்கிறதே தவிர இன்னும் கிராமங்களுக்கோ, நகரங்களுக்கோ மற்ற பகுதிகளுக்கோ போகவில்லை.

* பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை பொதுமக்கள் உள்ளே வர விடாமல் தடுக்கிறார்களே?

 கடந்த 10 ஆண்டு கால அராஜக அதிமுக ஆட்சியில் மக்கள் சித்தரவதைபட்டுக் கொண்டிருக்கின்றனர். எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதற்கு எடுத்துக்காட்டு எடப்பாடி ஆட்சி தான். இந்த ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல், நெடுஞ்சாலை துறையில் ஊழல், மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் ஊழல், மின்சார கொள்முதலில் ஊழல், இப்படி ஊழலில் சம்பாதித்த பணத்தை கொண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் இந்த தேர்தலை பொறுத்தவரை ஆட்சி மாற்றத்தை நோக்கி தமிழகம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. ஆயிரம் எடப்பாடிகள் ஒன்று சேர்ந்து எவ்வளவு பெரிய தொகையை செலவழித்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றத் தான் போகிறார்கள். ஆட்சி மாற்றம் உறுதி. மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும்.

Related Stories: